Type Here to Get Search Results !

thirukkural-test-4

 அன்புடைமை  (6th Old Tamil Book)

1) அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ் ஆர்வலர் புன்கணீர் பூசல் தரும்.

பொருள்: அன்பை அடைத்து வைக்க தாழ்ப்பாள் இல்லை; அன்புக்கு உரியவரின் துன்பத்தைப் பார்த்ததுமே அன்பு, கண்ணீராக வெளிப்பட்டு நிற்கும். (ஆர்வலர் அன்புடையவர்; புன்கணீர் துன்பம் கண்டு பெருகும் கண்ணீர்; பூசல் தரும் வெளிப்பட்டு நிற்கும்.)

2) அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு. 

பொருள்: அன்பில்லாதவர் எல்லாப் பொருளும் தமக்கு மட்டும் உரியது என்று எண்ணுவர்; அன்பு உடையவரோ தம் உடல், பொருள், ஆவி ஆகிய அனைத்தும் பிறருக்கென எண்ணிடுவர். (என்பு - எலும்பு. இங்கு உடல், பொருள், ஆவியைக் குறிக்கிறது.)

3) அன்போடு இயைந்த வழக்குஎன்ப ஆருயிர்க்கு என்போடு இயைந்த தொடர்பு.

பொருள்: உடம்போடு உயிர் இணைந்து இருப்பதனைப்போல, வாழ்க்கை நெறியோடு அன்பு இணைந்து இருக்கிறது. (வழக்கு - வாழ்க்கைநெறி; ஆருயிர் - அருமையான உயிர்; என்பு - எலும்பு.)

4) அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும் நண்புஎன்னும் நாடாச் சிறப்பு.*

பொருள்: அன்பு விருப்பத்தைத் தரும். விருப்பம் அனைவரிடமும் நட்புக்கொள்ளும் பெருஞ்சிறப்பைத் தரும். (ஈனும் - தரும்; ஆர்வம் - விருப்பம்; வெறுப்பை நீக்கி விருப்பத்தை உண்டாக்கும் என்பது பொருள். நண்பு - நட்பு.)

5) அன்புற்று அமர்ந்த வழக்குஎன்ப வையகத்து இன்புற்றார் எய்தும் சிறப்பு.

பொருள்: அன்போடு பொருந்திய வாழ்க்கை நெறியைக் கடைப்பிடித்தவர் உலகத்தில் மகிழ்ச்சி உடையவர் ஆவர். (வையகம் உலகம்; என்ப - என்பார்கள்.)

6. அறத்திற்கே அன்புசார்பு என்ப அறியார் மறத்திற்கும் அஃதே துணை.

பொருள்: அன்பு அறத்தை மட்டும் சார்ந்தது என்று கூறுவோர் அறியாதவர்; வீரத்திற்கும் அன்புதான் துணை. (மறம் - வீரம்; கருணை, வீரம் இரண்டிற்குமே அன்புதான் அடிப்படை என்பது பொருள்.)

7. என்பி லதனை வெயில்போலக் காயுமே அன்பி லதனை அறம். *

பொருள்: எலும்பு இல்லாத உயிர்களை வெயில் வருத்தி அழிப்பதுபோல, அன்பில்லாத உயிர்களை அறம் வருத்தி அழிக்கும். (என்பிலது - எலும்பு இல்லாதது (புழு); அன்பிலது - அன்பில்லாத உயிர்கள்.)

8) அன்பகத்து இல்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண் வற்றல் மரம்தளிர்த் தற்று.

பொருள்: பாலை நிலத்தில் உள்ள வாடிப்போன மரம் தளிர்க்காது. அதுபோல, நெஞ்சில் அன்பு இல்லாத மனிதர் வாழ்க்கை தளிர்க்காது. (அன்பகத்து இல்லா - அன்பு + அகத்து + இல்லா - அன்பு உள்ளத்தில் இல்லாத; வன்பாற்கண் - வன்பால் + கண் -பாலை நிலத்தில். தளிர்த்தற்று - தளிர்த்து + அற்று -தளிர்த்ததுபோல; வற்றல்மரம் - வாடிய மரம்.)

9) புறத்துறுப்பு எல்லாம் எவன்செய்யும் யாக்கை அகத்துறுப்பு அன்பி லவர்க்கு.

பொருள்: நெஞ்சில் அன்பு இல்லாதவர்க்குக் கை, கால் முதலிய உடல் உறுப்புகளால் என்ன பயன் ? (புறத்துறுப்பு-உடல் உறுப்புகள்; எவன் செய்யும் என்ன பயன் ?; அகத்துறுப்பு - மனத்தின் உறுப்பு, அன்பு.)

10) அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு. 

பொருள்: அன்பு செய்வதுதான் உடம்பில் உயிர் இருப்பதற்கு அடையாளம். அன்பில்லாதவர் உடம்பு வெறும் தோலால் மூடப்பட்ட எலும்புதான். அங்கு உயிர் இல்லை.

அன்புடைமை (6th New Tamil Book)

7. அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு.

அன்பு இல்லாதவர் எல்லாப் பொருளும் தமக்கே என்பார்கள். அன்பு உடையவர்கள் தம் உடம்பும் பிறர்க்கே என்பார்கள்.

8. அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு.

அன்பு இருப்பதுதான் உயிருள்ள உடல். அன்பு இல்லாதது வெறும் எலும்பும் தோலும் தான்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.