ஒழுக்கம் உடைமை
1. ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்.
2. பரிந்துஓம்பிக் காக்க ஒழுக்கம்; தெரிந்துஓம்பித்
தேரினும் அஃதே துணை.
3. ஒழுக்கம் உடைமை குடிமை; இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும்.
4. மறப்பினும் ஒத்துக் கொளலாகும்; பார்ப்பான்
பிறப்பொழுக்கம் குன்றக் கெடும்.
5. அழுக்காறு உடையான்கண் ஆக்கம்போன்று இல்லை
ஒழுக்கம் இலான்கண் உயர்வு
6. ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்
ஏதம் படுபாக்கு அறிந்து
7. ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை; இழுக்கத்தின்
எய்துவர் எய்தாப் பழி.
8. நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம்; தீயொழுக்கம்
என்றும் இடும்பை தரும்.
9. ஒழுக்க முடையவர்க்கு ஒல்லாவே தீய
வழுக்கியும் வாயால் சொலல்.
10. உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார்.
எளிய உரை
1. ஒழுக்கம் பெருஞ்சிறப்புத் தரும் ஆதலின்
உயிர் கொடுத்தும் காக்க வேண்டும்.
2. எவ்வளவு வருந்தினாலும் ஒழுக்கமாக இரு;
எவ்வளவு ஆராய்ந்தாலும் அதுவே துணை.
3. விடா ஒழுக்கமே உயர்ந்த குடிப்பிறப்பு;
ஒழுக்கத்தை விடுவது விலங்குப் பிறப்பு.
4. கற்பவன் மறந்தாலும் படித்துக் கொள்ளலாம்;
மானிட ஒழுக்கம் குறைந்தாலோ கெடுவான்.
5. பொறாமைப் பட்டவனுக்கு வளர்ச்சி உண்டோ?
ஒழுக்கம் கெட்டவனுக்கு உயர்வுண்டோ?
6. உரமுடையவர் ஒழுக்கம் சிறிதும் தளரார்;
தளரின் துன்பம் பல வருமென்று அறிவார்.
7. விடா ஒழுக்கத்தால் முன்னேற்றம் வரும்;
விடுவதால் பொருந்தாப் பழி வரும்.
8. நல்லொழுக்கம் நன்மைக்கெல்லாம் வித்து;
தீயொழுக்கத்தால் எந்நாளும் துன்பமே.
9. என்றும் ஒழுக்கம் உடையார் வாயிலிருந்து
தவறியும் தீய சொற்கள் தோன்றா.
10. உலகத்தோடு ஒட்டி ஒழுகத் தெரியாதவர்
பல கற்றிருந்தும் அறிவு இல்லாதவரே.
minnal vega kanitham