கண்ணோட்டம்
1. கண்ணோட்டம் என்னும் கழிபெரும் காரிகை
உண்மையான் உண்டுஇவ் வுலகு.
2. கண்ணோட்டத்து உள்ளது உலகியல்; அஃதுஇலார்
உண்மை நிலக்குப் பொறை.
3. பண்என்னாம் பாடற்கு இயைபுஇன்றேல்; கண்என்னாம்
கண்ணோட்டம் இல்லாத கண்?
4. உளபோல் முகத்துஎவன் செய்யும் அளவினால்
கண்ணோட்டம் இல்லாத கண்?
5. கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் அஃதுஇன்றேல்
புண்என்று உணரப் படும்.
6. மண்ணோடு இயைந்த மரத்துஅனையர் கண்ணோடு
இயைந்துகண் ணோடா தவர்.
7. கண்ணோட்டம் இல்லவர் கண்இலர்; கண்உடையார்
கண்ணோட்டம் இன்மையும் இல்.
8. கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு
உரிமை உடைத்துஇவ் வுலகு.
9. ஒறுத்துஆற்றும் பண்பினார் கண்ணும்கண் ணோடிப்
பொறுத்துஆற்றும் பண்பே தலை.
10. பெயக்கண்டு நஞ்சுஉண்டு அமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டு பவர்.
கண்ணோட்டம் -எளிய உரை
1. இரக்கம் என்னும் அழகிய பெரும்பண்பு இருத்தலால் இவ்வுலகம் இருக்கின்றது.
2. உலகியல் என்பது இரக்கப்பண்பில் உள்ளது: இரக்கமில்லார் இருப்பது பூமிக்குப் பாரம்.
3. பாட்டுக்குப் பொருந்தாத இசையாற் பயனென்? இரக்கம் காட்டாத கண்ணால் என்ன பயன்?
4. வேண்டும் அளவு இரக்கம் ஓடாத கண் முகத்தில் இருப்பதுபோல் காட்டுவது எதற்கு?
5. கண்ணிற்கு நகையாவது இரக்க உணர்வே: இரக்கமிலாக் கண்ணைப் புண்ணென்று கொள்க.
6. கண்ணோடிருந்தும் இரக்கம் இல்லாதவர் மண்ணோடிருந்தும் வளராத மரம் போல்வர்.
7. இரக்கம் இல்லாதவர் கண்ணில்லாதவர் கண்ணுடையவர் இரக்கம் உடையவர்.
8. காரியம் கெடாமல் இரக்கம் காட்டுவார்க்கு வயப்பட்டது இவ்வுலகம்.
9. தண்டிக்கும் ஆற்றல் இருப்பினும் மனமிரங்கிப் பொறுத்துக் கொள்ளும் பண்பே சிறந்தது.
10. யாவரும் விரும்பும் நாகரிகம் உடையவர் நேரே நஞ்சிடினும் உண்டு அடங்குவர்.
minnal vega kanitham