Type Here to Get Search Results !

கொடுக்கப்பட்ட பத்தியிலிருந்து கேட்கப்பட்ட வினாக்களுக்கு சரியான விடையைத் தேர்ந்தெடுத்தல் || 6th தமிழ் இயல் - 1 to 9 (New & Old)

0
கீழ்க்காணும் பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக.
விரிவான கருத்தைச் சுருக்கிச் சொல்வதே பழமொழியின் சிறப்பு. சான்றாக, சுத்தம் சோறு போடும் என்னும் பழமொழி தரும் பொருளைக் காண்போம். சுத்தம் நோயற்ற வாழ்வைத் தரும். உடல்நலமே உழைப்புக்கு அடிப்படை. உழைத்துத் தேடிய பொருளால் உணவு, உடை, உறைவிடம் ஆகியவற்றைப் பெறுகிறோம். இவை அனைத்திற்கும் சுத்தமே அடிப்படை. இவ்விரிந்த கருத்து சிறு அடிக்குள் அடங்கியுள்ளது.
வினாக்கள்
1. பழமொழியின் சிறப்பு ______ சொல்வது
அ) விரிவாகச்
ஆ) சுருங்கச்
இ) பழைமையைச்
ஈ) பல மொழிகளில்
ஆ) சுருங்கச்

2. நோயற்ற வாழ்வைத் தருவது?
சுத்தம்.

3. உடல்நலமே ______ அடிப்படை?
உழைப்புக்கு

4. உழைத்துத் தேடிய பொருளால் நாம் பெறுவன யாவை?
உழைத்துத் தேடிய பொருளால் நாம் பெறுவன : உணவு, உடை, உறைவிடம்

5. பத்திக்குப் பொருத்தமான தலைப்புத் தருக?
சுத்தம்


கீழ்க்காணும் நிகழ்வினைப் படிக்கக் கேட்டு வினாக்களுக்கு விடையளிக்க.
மனந்தளரா 'டேரிபாக்ஸின்' கதையை நீங்கள் அறிந்ததுண்டா ? யார் இந்த டேரிபாக்ஸ்? இவர், கனடாவைச் சேர்ந்த கூடைப்பந்தாட்ட வீரர்; புற்றுநோயால் பாதிக்கப்பட்டு தன் வலது காலை இழந்தவர்; இருந்தும் மனந்தளராமல் செயற்கைக் காலைப் பொருத்திக்கொண்டு, சக்கர நாற்காலியில் அமர்ந்தவாறு கூடைப்பந்தாட்டம் விளையாடிப் பரிசுகள் பல வென்றவர்.
அவருக்கு ஓர் எண்ணம் ஒரு நாள் தோன்றியது. புற்றுநோயாளிகளின் நலவாழ்வுக்காக நிதி திரட்ட எண்ணினார். அதற்காக அவர், கனடாவின் சாலைகளில் தொடரோட்டம் (மாரத்தான் ஓட்டம் ) ஓடுவது என முடிவெடுத்தார். அவர் உடல்நலம் கருதி மருத்துவர் வேண்டாவெனக் கூறினார். அவர்தம் அறிவுரையைப் பொருட்படுத்தாத டேரிபாக்ஸ் கனடாவின் சாலைகளில் நூற்று நாற்பத்து மூன்று நாள் ஒடினார். நிதி மளமளவெனத் திரண்டது. ஆனால், அவரின் வாழ்நாளோ குறையலாயிற்று. அதனால், அவர், இருபத்துமூன்றாம் வயதிலேயே மரணமடைந்தார். அவரின் நினைவாக ஆண்டுதோறும் செப்டம்பர் பதினைந்தாம் நாள் உலகின் பல நாடுகளிலும் 'டேரிபாக்ஸ் புற்றுநோய் ஓட்டம்' நடத்தப்படுகிறது.
வினாக்கள்
1. டேரிபாக்ஸ் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
கனடா

2. டேரிபாக்ஸ் எந்த விளையாட்டில் சிறந்து விளங்கினார்?
கூடைப்பந்தாட்டம்

3. டேரிபாக்ஸ் தன் வலது காலை இழக்கக் காரணம் என்ன?
புற்றுநோய்

4. டேரிபாக்ஸ் எச்செயலைச் செய்யக் கூடாது என மருத்துவர் கூறினார்?
கனடாவின் சாலைகளில் தொடரோட்டம் எனப்படும் மாரத்தான் ஓட்டம் ஓடுவது உடல்நலம் பாதிக்கப்படும் என்பதால் செய்யக் கூடாது என்றனர்.

5. 'டேரிபாக்ஸ் புற்றுநோய் ஓட்டம்' எந்நாளில் நடத்தப்படுகிறது?
செப்டம்பர் 15


கீழ்க்காணும் பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக.
இலக்கியா, தன் பெற்றோருடன் உயிரியல் பூங்காவிற்குச் சென்றாள். தன்னருகில் துள்ளிவந்த மானைச் சிறுகல்லால் அடித்தாள்; மான் மருண்டு ஓடியது. விலங்குகளைப் பார்த்துக்கொண்டே குரங்குகள் இருக்குமிடத்திற்குச் சென்றவள், கீழே இருந்த குச்சியை எடுத்துக் குரங்கின்மீது வீசினாள்.
வேர்க்கடலையைத் தின்றுவிட்டுப் பறவைகள் பகுதியில் இருந்த மயில் கூண்டுக்குள் தோலை வீசினாள்.
பாம்புகளைப் பார்க்கச் சென்ற இலக்கியா, பாம்புகள் வைக்கப்பட்டிருந்த கண்ணாடிப் பெட்டிகளைத் தட்டிக்கொண்டே வந்தாள். திடீரென ஒரு பாம்பு படமெடுத்துச் சீறியது. அதனைக் கண்டு பயந்து அலறியபடி தாயைக் கட்டியணைத்தாள்.
பயிற்சி: கீழ்க்காணும் வினாக்களைப் படித்து விடையளிக்கவும்.
1. இலக்கியா, மானைக் கல்லால் அடித்தது முறையா?
தவறான செயலாகும்

2. குரங்குகளைத் துன்புறுத்தலாமா?
துன்புறுத்தக்கூடாது.

3. பூங்காவில் பறவைகள், விலங்குகளுக்குத் தின்பண்டங்களைத் தரலாமா?
பூங்கா ஊழியர்களின் மேற்பார்வையில் தரலாம்.

4. இலக்கியா, பாம்புகள் இருந்த பெட்டியைத் தட்டியது முறையா?
தவறான செயலாகும்.

5. பறவைகள், விலங்குகளிடம் நாம் எவ்வாறு நடந்துகொள்ளுதல் வேண்டும்?
அன்புடனும் கனிவுடனும் நடந்து கொள்ள வேண்டும்.


கீழ்க்காணும் உரைப்பத்தியைச் சொல்லக் கேட்டு வினாக்களுக்கு விடையளிக்க.
'விளையும் பயிர் முளையிலேயே தெரியும்' என்பது மூத்தோர் மொழி. ஒருவரிடம் எதிர்காலத்தில் வெளிப்பட இருக்கின்ற ஆற்றலை இளம்வயதிலேயே காணலாம். சிறு வயதில் மரத்தின்மீது ஏறி, நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த 'நரேந்திரதத்தை' அவ்வழியே சென்ற ஒருவர், 'அம்மரத்தில் பேய் இருக்கிறது; இறங்கி ஓடிவிடுங்கள்' எனப் பயமுறுத்தினார். மற்ற சிறுவர்கள் இறங்கி ஒட, நரேந்திரதத் மட்டும் எவ்வித அச்சமும் இல்லாமல் மரத்தின்மீதே இருந்தார். மேலும் அச்சிறுவர்களிடம், 'நண்பர்களே, அவர் பேய் இருக்கிறது எனச் சொல்வதற்குமுன்பே நாம் இங்கு விளையாடிக் கொண்டிருந்தோம். இதுவரை நாம் எந்தப் பேயையும் பார்த்தது இல்லை. அதனால், பயப்படாமல் வாருங்கள்" என்றார்.
வினாக்கள்
1. பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ளவர் புகழ்மிக்கவர். அவர் யார்?

2. யார் எதனைப் பற்றிக் கூறினாலும் ஆராயாமல் ஏற்றுக்கொள்ளுதல் கூடாது ஏன்?
யார் எதனைப் பற்றிக் கூறினாலும் நமது அறிவைக் கொண்டு பகுத்தாய்வு செய்துதான் ஏற்றுக்கொள்ளவோ நிரகரிக்கவோ வேண்டும்.

3. மூடநம்பிக்கையைப் பற்றி உங்கள் கருத்து யாது?
மூடநம்பிக்கையாக இருக்க கூடாது.

4. இளமையில் நீங்கள் அஞ்சி நடுங்கிய நிகழ்வு ஏதேனும் இருந்தால், அதனைக் கூறுக.
ஏதுமில்லை


கீழ்க்காணும் பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக.
மனிதனுடைய மனத்தில் உணர்ச்சிகளை எழுப்பி அழகையும் இன்பத்தையும் அளிக்கின்ற பண்பு அழகுக்கலைகளுக்கு உண்டு. அழகுக்கலைகள், மனத்திலே உணர்ச்சியை எழுப்பி அழகுக் காட்சியையும் இன்ப உணர்ச்சியையும் கொடுத்து மகிழ்விக்கிறபடியினாலே, நாகரிகம் படைத்த மக்கள் அழகுக் கலைகளைப் போற்றுகிறார்கள்; பேணி வளர்க்கிறார்கள்; துய்த்து இன்புற்று மகிழ்கிறார்கள். அழகுக்கலைக்கு இன்கலை என்றும் கவின்கலை என்றும் நற்கலை என்றும் வேறு பெயர்கள் உண்டு. இவ்வழகுக் கலைகள் ஐந்து. அவை, கட்டடக்கலை, சிற்பக்கலை, ஓவியக்கலை, இசைக்கலை, காவியக்கலை என்பன.
- மயிலை சீனி. வேங்கடசாமி, தமிழர் வளர்த்த அழகுக்கலைகள்
வினாக்கள்
1. நாகரிகம் படைத்த மக்கள் எதனைப் போற்றுகின்றனர்?
அழகுக் கலைகளைப் போற்றுகிறார்கள்.

2. அழகுக்கலைக்கான பண்பு யாது?
மனிதனுடைய மனத்தில் உணர்ச்சிகளை எழுப்பி அழகையும் இன்பத்தையும் அளிக்கின்ற பண்பு அழகுக்கலைகளுக்கு உண்டு.

3. அழகுக்கலைக்கான வேறு பெயர்களை எழுதுக.
இன்கலை, கவின்கலை, நற்கலை

4. அழகுக்கலை எத்தனை வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது?
ஐந்து

5. உரைப்பத்திக்குப் பொருத்தமான தலைப்பிடுக.
அழகுக்கலை


கீழ்க்காணும் பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக.
மலையூரில் வாழ்ந்து வந்த இனியன், வேலையில்லாமல் வீணாகப் பொழுதுபோக்கி வந்தான். அவன் நிலையைக்கண்டு அவனுடைய தாய் மிகவும் வருந்தினாள். ஒருநாள் இனியனை அழைத்து, 'உள்ளூரில்தான் நீ வேலை செய்ய விரும்பவில்லை. பக்கத்து ஊருக்குச்சென்று வேலை கிடைக்கிறதா என்று பார்த்துவிட்டு வா' என்று கூறினாள். தாயின் மனம் வருந்தக்கூடாது என எண்ணிய இனியன், கட்டுச்சோற்று மூட்டையுடன் புறப்பட்டான். பகல் முழுவதும் வேலையைத் தேடி அலைந்தான். ஆனால், அவன் எதிர்பார்த்தபடி எந்த ஒரு வேலையும் அமையவில்லை. மிகவும் களைப்படைந்த இனியன், அருகிலிருந்த பூவரசு மர நிழலில் உட்கார்ந்து ஓய்வெடுத்தான். பின்னர், கட்டுச்சோற்று மூட்டையை அவிழ்த்து வயிறாரச் சோறு உண்டான். உண்ட மயக்கம் தீர கையைத் தலைக்கு வைத்து அங்கேயே படுத்துவிட்டான். உறக்கம் நீங்கி எழுந்த இனியன், மரத்தை உற்று நோக்கினான். 'இந்தப் பூவரசுமரம் மிகவும் பெரியதாக உள்ளதே, இந்த மரத்தையே வெட்டி விறகு விற்றால் என்ன ? நிறைய பணம் வருமே' என்று எண்ணினான். அடுத்த நாள் காலையில், கையில் கோடரியுடன் வந்தான். அந்தப் பூவரசுமரத்தின் கிளைகளை வெட்டத் தொடங்கினான். களைப்பின் மிகுதியால் அம்மர நிழலிலேயே படுத்துறங்கினான். இவ்வாறு ஓய்வெடுப்பதும் மரக்கிளையை வெட்டுவதும் மாலை நேரமானதும் விறகுகளை ஒன்றாகச் சேர்த்துக்கட்டித் தலையில் சுமந்து செல்வதுமாக இருந்தான். நாள் செல்லச்செல்ல பூவரசுமரம் முழுமையாக வெட்டப்பட்டு அந்த இடம் வெறுமையாக மாறியது.
சில நாள் கழித்து மீண்டும் வேலை தேடி அலைந்த இனியன் வழக்கம்போல் மரத்தின் நிழலில் ஒய்வெடுக்க விரும்பினான். ஆனால், அங்குப் பூவரசுமரம் இல்லாததனால், வெயில் அவனைச் சுட்டெரித்தது. நிழல் தந்த மரத்தை வெட்டியமைக்காக மிகவும் மனம் வருந்தினான்.
வினாக்கள்
1. கதையின் மையக்கருத்து யாது?
மரம் வெட்டக் கூடாது.

2. கதையில் இடம்பெறும் மரத்தின் பெயர் என்ன?
பூவரசு மரம்

3. இனியன் பூவரசுமரத்தை வெட்டக் காரணம் யாது?
மரத்தை வெட்டி விற்று பணம் சம்பதிக்கலாம் என்பதே காரணம்.

4. பூவரசுமரத்தை வெட்டத்தொடங்கியதும் இனியனின் ஒவ்வொரு நாளும் எவ்வாறு கழிந்தது?
ஒவ்வொரு நாளும் களைப்பின் மிகுதியால் அம்மர நிழலிலேயே படுத்துறங்கினான்.

5. இக்கதையின் வாயிலாக நீ அறிந்துகொள்வது என்ன?
– மரம் நமக்கு இயற்கையின் கொடையாகும். எனவே நாம் இயற்கையை பாதுகாக்க வேண்டும்.


கீழ்க்காணும் பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக
இயல்பாகவே தோன்றி மறையும் பொருள்கள், அவற்றின் இயக்கம், அவை இயங்கும் இடம், இயங்கும் காலம் அனைத்தும் ஒன்றிணைந்ததே இயற்கை என்கிறோம். பனிபடர்ந்த நீலமலைகள், பாடித்திரியும் பறவைகள், தன்னிச்சையாகச் சுற்றித்திரியும் விலங்குகள், சலசலக்கும் ஓடைகள், ஆர்ப்பரித்து வீழும் அருவிகள், நீந்தும் மீன்கள், அலைவீசும் அழகிய கடல், கண்சிமிட்டும் விண்மீன்கள், தங்க ஓடமாய்த் தவழ்ந்து வரும் வெண்ணிலா இவையெல்லாம் இயற்கை நமக்குத் தந்த கொடைகள்.
இயற்கையின் அழகைக் கண்டு இன்புற்றால் மட்டும் போதாது. அந்த அழகை நாம் பாதுகாக்க வேண்டும். நாம் நமது தேவைக்காக மலைகள், காடுகள், விலங்குகள், பறவைகள் ஆகியவற்றை அழித்து வருகிறோம். மேலும் நிலம், நீர், காற்று ஆகியவற்றை மாசுபடுத்தி வருகிறோம். அதனால் இயற்கைச் சமநிலை மாறி புவி வெப்பமயமாகிறது. புவி வெப்பமடையாமல் காப்பது நமது கடமை. இயற்கையைப் பாதுகாத்தால் மட்டுமே நாம் நம்மையும் பாதுகாத்துக்கொள்ள முடியும். 1. எதனை இயற்கை என்கிறோம்?
இயல்பாகவே தோன்றி மறையும் பொருள்கள், அவற்றின் இயக்கம், அவை இயங்கும் இடம், இயங்கும் காலம் அனைத்தும் ஒன்றிணைந்ததே இயற்கை என்கிறோம்

2. இப்பத்தியில் உள்ள இயற்கையை வருணிக்கும் சொற்கள் யாவை?
பனிபடர்ந்த நீலமலைகள், பாடித்திரியும் பறவைகள், தன்னிச்சையாகச் சுற்றித்திரியும் விலங்குகள், சலசலக்கும் ஓடைகள், ஆர்ப்பரித்து வீழும் அருவிகள், நீந்தும் மீன்கள், அலைவீசும் அழகிய கடல், கண்சிமிட்டும் விண்மீன்கள், தங்க ஓடமாய்த் தவழ்ந்து வரும் வெண்ணிலா

3. இயற்கையை ஏன் பாதுகாக்க வேண்டும்?
இயற்கையை பாதுகாத்தால் மட்டுமே நாம் நம்மையும் பாதுகாத்துக்கொள் முடியும். எனவே நாம் இயற்கையை பாதுகாக்க வேண்டும்.

4. பத்திக்குப் பொருத்தமான தலைப்புத் தருக.
இயற்கை


பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை எழுதுக.
1921 ஆம் ஆண்டு மத்திய தரைக் கடலில், ஒரு கப்பல் இங்கிலாந்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. தமிழர் ஒருவர் கப்பலின் மேல்தளத்தில் நின்று கடல் அலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தார். திடீரென அவரது உள்ளத்தில் கடல்நீர் ஏன் நீலநிறமாகக் காட்சியளிக்கிறது என்ற வினா எழுந்தது. அவ்வினா அவரை உறங்க விடவில்லை. இங்கிலாந்து பயணம் முடிந்து இந்தியா திரும்பினார். பிறகு பாதரச ஆவி விளக்கு, பென்சீன் மற்றும் நிறமாலைக் காட்டி ஆகியவற்றின் உதவியுடன் தமது ஆய்வைத் தொடங்கினார்.
ஆய்வின் முடிவில் 1928 பிப்ரவரி 28 ஆம் நாள் "இராமன் விளைவு" என்னும் தமது கண்டுபிடிப்பை வெளியிட்டார். இக்கண்டுபிடிப்பு இந்தியாவிற்கு அறிவியலுக்கான முதல் நோபல் பரிசைப் பெற்றுத் தந்தது. அவர் தமது கண்டுபிடிப்பை வெளியிட்ட பிப்ரவரி 28 ஆம் நாளை நாம் ஆண்டு தோறும் " தேசிய அறிவியல் நாள்" எனக் கொண்டாடி மகிழ்கிறோம். அவர் யார் தெரியுமா? அவர்தான் சர்.சி.வி.இராமன். 1. இராமன் விளைவைக் கண்டறிந்தவர் யார்?
சர் சி.வி.இராமன்

2. இராமன் அவர்களுக்கு நோபல் பரிசைப் பெற்றுத் தந்த கேள்வி எது?
அ) கடல்நீர் ஏன் கறுப்பாகக் காட்சியளிக்கிறது?
ஆ) கடல்நீர் ஏன் நீல நிறமாக இல்லை?
இ) கடல்நீர் ஏன் நீல நிறமாகக் காட்சியளிக்கிறது?
ஈ) கடல்நீர் ஏன் உப்பாக இருக்கிறது?
கடல் நீர் ஏன் நீல நிறமாகக் காட்சியளிக்கிறது?

3. தேசிய அறிவியல் நாள் எப்போது கொண்டாடப்படுகிறது ? ஏன்?
பிப்ரவரி 28, சர் சி.வி.இராமன் தன் கண்டுபிடிப்பை வெளியிட்ட நாள் என்பதால் கொண்டாடுகிறோம்.

4. இப்பத்திக்குப் பொருத்தமான தலைப்பிடுக.
சர். சி.வி.இராமன்


பின்வரும் பத்தியைப் படித்து வினாவிற்கேற்ற விடையளிக்கவும்.
காமராசரின் வீட்டுக்குள் ஒரு சிறுவனும் அவனுடைய தங்கையும் நுழைய முயன்றனர். ஊழியர் அவர்களைத் தடுப்பதைக் காமராசர் கவனித்தார். உடனே அவர்களை உள்ளே அழைத்தார். "யாரைப் பார்க்க வந்தீங்க?" என்று அன்புடன் வினவினார். "எங்க அண்ணனுக்குத் தேர்வுக்குப் பணம் கட்ட அம்மாவிடம் வசதியில்லே. உங்களைப் பார்த்தால்..." என்று சிறுமி கூறி முடிப்பதற்குள், "அம்மா அனுப்பி விட்டாரா?" என்று காமராசர் கேட்டார். "இல்லை நாங்களாகத்தான் வந்தோம். அம்மா அப்பளம் போட்டு வீடு வீடாகக் கொண்டு போய் வித்துட்டு வருவாங்க. அதில் வரும் வருமானத்தை வச்சுத்தான் எங்களைப் படிக்க வைக்கிறாங்க" என்று குழந்தைகள் கூறினர். அதனைக் கேட்டதும் மாடியேறிச் சென்று பணத்தைக் கொண்டு வந்து கொடுத்தார்.
மறுநாள் குழந்தைகள் இருவரும் காமராசரைத் தேடி வந்தனர். "ஐயா தேர்வுக்குப் பணம் கட்டியாச்சு. இந்த இரசீதை (பற்றுச் சீட்டை) அம்மா உங்களிடம் காட்டிட்டு வரச் சொன்னாங்க" என்றனர். அதனைக் கேட்டுக் காமராசர் மனம் நெகிழ்ந்தார். 1. காமராசரின் வீட்டிற்குள் நுழைய முயன்றவர்கள்________
அ) பெற்றோர்
ஆ) சிறுவன், சிறுமி
இ) மக்கள்
ஈ) ஆசிரியர்கள்
ஆ) சிறுவன், சிறுமி

2. இந்நிகழ்வு சிறுவனது குடும்பத்தின் எப்பண்பை விளக்குகிறது?
அ) ஏழ்மை
ஆ) நேர்மை
இ) உழைப்பு
ஈ) கல்லாமை
ஆ) நேர்மை

3. மறுநாள் குழந்தைகள் வந்ததும் காமராசர் மனம் ________
நெகிழ்ந்தார்

4. சிறுவனும் சிறுமியும் எதற்காகக் காமராசரின் வீட்டிற்கு வந்தனர்?
சிறுவனும் சிறுமியும் தன் அண்ணனுக்குத் தேர்வுக்குக் கட்டணம் கட்டுவதற்குப் பணம் இல்லாததால் பண உதவி கேட்டு காமராசரின் வீட்டிற்கு வந்தனர்.

5. காமராசர் செய்த உதவி யாது?
காமராசர் ஏழை மாணவன் ஒருவனுக்குத் தேர்வுக்குக் கட்ட வேண்டிய பணத்தைக் கொடுத்து உதவினார்.


கீழ்க்கண்ட பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை எழுதுக
மனிதர்களுக்குத் தேவையான பொருள்களைக் கிடைக்கச் செய்வதே வணிகத்தின் நோக்கங்களுள் ஒன்று. ஓர் இடத்தில் உற்பத்தியாகும் பொருள்களைப் பல இடங்களுக்கு அனுப்புவதும் பல இடங்களில் கிடைக்கும் பொருள்களை ஓர் இடத்தில் கிடைக்கச் செய்வதும் வணிகம் ஆகும்.
கிடைக்கும் பொருள்களின் மதிப்பைக் கூட்டிப் புதிய பொருளாக மாற்றுவது சிறந்த வணிகமாகும். சான்றாகக் கல் என்பது விற்பனைப் பொருளன்று. ஆனால் அதனைச் செதுக்கிச் சிலையாக மாற்றலாம். உதிரும் கல்தூளைக் கோலமாவாக மாற்றலாம். இதனை மதிப்புக் கூட்டுதல் என்பர். 1. கிடைக்கும் பொருள்களின் _______ க் கூட்டிப் புதிய பொருளாக மாற்றுவது சிறந்த வணிகம்.
(அ) அளவை
(ஆ) மதிப்பை
(இ) எண்ணிக்கையை
(ஈ) எடையை
(ஆ) மதிப்பை

2. சிலை செதுக்கப்படும்போது உதிரும் கல்தூளை _______ மாற்றலாம்.
கோலமாவாக

3. வணிகத்தின் நோக்கம் என்ன?
மனிதர்களுக்குத் தேவையான பொருள்களைக் கிடைக்கச் செய்வதே வணிகத்தின் நோக்கங்களுள் ஒன்று

4. மதிப்புக் கூட்டுதல் என்றால் என்ன?
மூலப்பொருட்களையோ பகுதி முழுமையடைந்த பொருட்களையோ முழுமையான பொருட்களாக மாற்றுவது மதிப்புக் கூட்டுதல் எனப்படும்

5. இப்பத்திக்கு ஏற்ற தலைப்பை எழுதுக
வணிகம்


கீழ்க்காணும் பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை எழுதுக
இந்திய விடுதலைக்குப் பாடுபட்டவர்களுள் ஒருவர் வ.உ.சிதம்பரனார். வ.உ.சி. அவர்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் புலமை பெற்றிருந்தார். அவர், வழக்கறிஞர், எழுத்தாளர், பேச்சாளர், தொழிற்சங்கத் தலைவர் என்னும் பன்முகத்தன்மை பெற்றிருந்தார். ஆங்கிலேயரின் கப்பல்களுக்குப் போட்டியாக உள்நாட்டு இந்தியக் கப்பல் நிறுவனத்தைத் தொடங்கியவர். 1906 ஆம் ஆண்டு அக்டோபர் 16ஆம் நாள் "சுதேசி நாவாய்ச் சங்கம்" என்ற கப்பல் நிறுவனத்தைப் பதிவு செய்தார். வ.உ.சி. சென்னைக்குச் செல்லும்போது பாரதியாரைச் சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். மேலும், பாரதியார் பாடல்களை விரும்பிக் கேட்பார். 1. சுதேசி நாவாய்ச் சங்கத்தை நிறுவியவர் யார்?
வ.உ.சி.

2. வ.உ.சி. சென்னைக்குச் செல்லும்போது யாரைச் சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்?
பாரதியாரை

3. வ.உ.சி. அவர்கள் யாருடைய பாடல்களை விரும்பிக் கேட்பார்?
பாரதியார்

4. வ. உ. சி. அவர்களின் பன்முகத் தன்மைகள் யாவை?
வழக்கறிஞர், எழுத்தாளர், பேச்சாளர், தொழிற்சங்கத்தலைவர்

5. வ.உ.சி. அவர்கள் புலமை பெற்றிருந்த மொழிகள் யாவை?
தமிழ், ஆங்கிலம்


பத்தியைப் படித்துக் கீழ்க்காணும் வினாக்களுக்கு விடையளிக்க.
அரசர் ஒருவர் தம் நாட்டு மக்களிடம் "அமைதி என்றால் என்ன?" என்பதை விளக்கும் வகையில் ஓவியமாக வரைந்து கொடுப்பவர்களுக்கு மிகச்சிறந்த பரிசு வழங்கப்படும் என்று அறிவித்தார். இதையடுத்து நாட்டின் முன்னணி ஓவியர்கள் அமைதியை வெளிப்படுத்தும் வகையில் பல ஓவியங்களை வரைந்து அரண்மனைக்குக் கொண்டு வந்தனர். அரசர் ஒவ்வொரு ஓவியமாகப் பார்த்துக் கொண்டே வந்தார். அழகிய மலையின் அடிவாரத்தில் ஓர் ஏரி இருப்பது போல் ஓவியம் ஒன்று இருந்தது. அது மிகவும் சிறப்பாக இருந்தது. பார்த்த உடனே பறிக்கத் தூண்டும் வகையில் மலர்களின் ஓவியம் ஒன்று இருந்தது. இப்படி ஒவ்வொருவரும் அமைதியைத் தங்களுக்குத் தோன்றியபடி ஓவியத்தில் வெளிப்படுத்தி இருந்தனர். ஓர் ஓவியத்தில் ஒரு மலைமேல் இருந்து ஆர்ப்பரித்துக் கொட்டும் அருவியின் படம் வரையப்பட்டிருந்தது. அதிலேயே இடியோடு மழை கொட்டிக் கொண்டு இருந்தது. சற்று உற்றுப் பார்த்தால் அருவியின் கீழே இருந்த மரம் ஒன்றில் பறவைக் கூட்டில் பறவை ஒன்று தனது குஞ்சுகளோடு இருந்தது.
"இந்த ஓவியத்தை வரைந்தது யார்?" என்று அரசர் கேட்டார். அந்த ஓவியர் வந்தார். "இந்த ஓவியத்தில் அமைதி எங்கே இருக்கிறது?" என்றார் அரசர். அதற்கு ஓவியர் "மன்னா பிரச்சினையும் போராட்டமும் ஆரவாரமும் இல்லாத இடத்தில் இருப்பது அமைதி அன்று. இவை எல்லாம் இருக்கும் இடத்தில் இருந்தும், எதற்கும் கலங்காமலும், தன்னை எதுவும் பாதிக்க விடாமலும் உள்ளுக்குள் அமைதியாக இருப்பதே உண்மையான அமைதி" என்றார். 1. அமைதி என்றவுடன் உங்கள் மனதில் தோன்றுவது என்ன?
எதற்கும் கலங்காமல் இருப்பது.

2. இக்கதையில் அமைதி எங்கு இருப்பதாகக் கூறப்படுகிறது?
பறவைக் கூட்டில்

3. நீங்கள் இந்த ஓவியப் போட்டியில் பங்கு பெற்று இருந்தால் என்ன ஓவியம் வரைந்து இருப்பீர்கள்?
--

4. இக்கதைக்குப் பொருத்தமான தலைப்பு ஒன்று தருக.
அமைதி


கருத்துரையிடுக

0 கருத்துகள்