Type Here to Get Search Results !

Day 42 New syllabus அடிப்படையில் 10th தமிழ் இயல் - 7

0
ஊர்ப் பெயர்களின் மரூஉவை எழுதுக.
புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, உதகமண்டலம், கோயம்புத்தூர், நாகப்பட்டினம், புதுச்சேரி, கும்பகோணம், திருநெல்வேலி, மன்னார்குடி, மயிலாப்பூர், சைதாப்பேட்டை
எ.கா.
• தஞ்சாவூர் - தஞ்சை
• புதுக்கோட்டை - புதுகை
• திருச்சிராப்பள்ளி - திருச்சி
• உதகமண்டலம் - உதகை
• கோயம்புத்தூர் - கோவை
• நாகப்பட்டினம் - நாகை
• புதுச்சேரி - புதுவை
• கும்பகோணம் - குடந்தை
• திருநெல்வேலி - நெல்லை
• மன்னார்குடி - மன்னை
• மயிலாப்பூர் - மயிலை
• சைதாப்பேட்டை - சைதை

கலைச்சொல் அறிவோம்
• Consulate - துணைத்தூதரகம்
• Patent - காப்புரிமை
• Document – ஆவணம்
• Guild - வணிகக் குழு
• Irrigation - பாசனம்
• Territory - நிலப்பகுதி

தெரிந்து தெளிவோம்
பாடம் 7.1. சிற்றகல் ஒளி - ம.பொ.சிவஞானம்
தெரிந்து தெளிவோம்
• நான் சிலப்பதிகாரக் காப்பியத்தை மக்களிடம் கொண்டுசெல்ல விரும்பியதற்குக் காரணமுண்டு; திருக்குறளையோ, கம்பராமாயணத்தையோ விரும்பாதவனல்லன்; ஆயினும் இந்திய தேசிய ஒருமைப்பாட்டிற்குக் கேடில்லாத வகையில், தமிழினத்தை ஒன்றுபடுத்த எடுத்துக்கொண்ட முயற்சிக்குப் பயன்படக்கூடிய ஓர் இலக்கியம் தமிழில் உண்டென்றால், அது சிலப்பதிகாரத்தைத் தவிர வேறில்லையென்று உறுதியாகக் கூறுவேன்.
• இளங்கோ தந்த சிலம்பு, தமிழினத்தின் பொதுச்சொத்து. எனவேதான் தமிழகத்தின் பட்டிதொட்டியெங்கும் சிலப்பதிகார மாநாடுகள் நடத்தினோம். சிலம்புச் செல்வர் ம.பொ.சி
மார்ஷல் ஏ. நேசமணி
• இளம் வயதிலேயே சமூக விடுதலைக்காகப் போராடியவர்; வழக்கறிஞர்.
• நாகர்கோவில் நகர்மன்றத் தலைவராகவும் சட்டமன்ற உறுப்பினராகவும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றினார்.
• குமரி மாவட்டப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றவர்; இதனால் மார்ஷல் நேசமணி என்று அழைக்கப்பட்டார்.
• 1956 நவம்பர் 1ஆம் நாள் கன்னியாகுமரி மாவட்டம் தமிழ்நாட்டுடன் இணைந்து, தமிழகத்தின் தென் எல்லையாக மாறியது.
• இவருடைய நினைவைப் போற்றும் வகையில் தமிழக அரசு இவருக்கு நாகர்கோவிலில் சிலையோடு மணிமண்டபமும் அமைத்துள்ளது.
எத்திசையும் புகழ் மணக்க......
கடல் கடந்த தமிழ் வணிகம்
• ஆஸ்டிரியா நாட்டுத் தலைநகரமான வியன்னாவில் அமைந்துள்ள அருங்காட்சியகத்தில் பேபிரஸ் தாளில் எழுதப்பட்ட அரிய கையெழுத்துச் சுவடி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.
• இச்சுவடி சேர நாட்டுத் துறைமுகமான முசிறியில் வாழ்ந்த தமிழ் வணிகருக்கும் எகிப்து நாட்டின் அலெக்ஸாண்டிரியா துறைமுகத்தில் வாழ்ந்த கிரேக்க வணிகருக்கும் இடையிலான வணிக ஒப்பந்தம்.
• இது கி.பி. 2ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டது.
நூல் வெளி
• ம.பொ.சிவஞானத்தின் 'எனது போராட்டம்' என்னும் தன்வரலாற்று நூலில் இருந்து இக்கட்டுரை தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.
• சிலம்புச்செல்வர் என்று போற்றப்படும் ம.பொ.சிவஞானம் (1906 - 1995) விடுதலைப் போராட்ட வீரர்; 1952 முதல் 1954வரை சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும் 1972 முதல் 1978வரை சட்டமன்ற மேலவைத் தலைவராகவும் பதவி வகித்துள்ளார்;
• தமிழரசுக் கழகத்தைத் தொடங்கியவர்.
• 'வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு' என்னும் இவருடைய நூலுக்காக 1966ஆம் ஆண்டு சாகித்திய அகாதெமி விருது பெற்றார்.
• தமிழக அரசு திருத்தணியிலும் சென்னை தியாகராய நகரிலும் இவருக்குச் சிலை அமைத்துள்ளது.
பாடம் 7.2. ஏர் புதிதா? -கு.ப.ராஜகோபாலன்
வேளாண்மை செழிக்கவும் மானுடம் தழைக்கவும் சித்திரைத் திங்களில் நடத்தப்படும் பொன் ஏர் பூட்டுதல் தமிழர் பண்பாட்டின் மகுடம் ஆகும்
நூல் வெளி
• 'ஏர் புதிதா?' எனும் கவிதை கு.ப.ரா.படைப்புகள் என்னும் நூலில் இடம்பெற்றுள்ளது.
• 1902இல் கும்பகோணத்தில் பிறந்த கு.ப.ராஜகோபாலன் மிகச்சிறந்த சிறுகதை ஆசிரியர், கவிஞர், நாடக ஆசிரியர், மறுமலர்ச்சி எழுத்தாளர் எனப் பன்முகம் கொண்டவர்.
• தமிழ்நாடு, பாரதமணி, பாரததேவி, கிராம ஊழியன் ஆகிய இதழ்களில் ஆசிரியராகப் பணிபுரிந்தார்.
• இவரின் மறைவுக்குப் பின்னர் இவரது படைப்புகளுள் அகலிகை, ஆத்மசிந்தனை ஆகியன நூல்களாகத் தொகுக்கப்பட்டுள்ளன.
பாடம் 7.3. மெய்க்கீர்த்தி
நூல் வெளி
• கோப்பரகேசரி, திருபுவனச் சக்கரவர்த்தி என்று பட்டங்கள் கொண்ட இரண்டாம் இராசராச சோழனது மெய்க்கீர்த்தியின் ஒரு பகுதி பாடமாக உள்ளது.
• இம்மெய்க்கீர்த்திப் பகுதியின் இலக்கிய நயம் நாட்டின் வளத்தையும் ஆட்சிச் சிறப்பையும் ஒருசேர உணர்த்துவதாக உள்ளது.
• இவருடைய மெய்க்கீர்த்திகள் இரண்டு.
• அதில் ஒன்று 91 அடிகளைக் கொண்டது. அதில் 16-33 வரையான அடிகள் பாடப்பகுதியாகத் தரப்பட்டுள்ளன.
• இப்பாடப் பகுதிக்கான மூலம் தமிழ் இணையக் கல்விக் கழகத்திலிருந்து பெறப்பட்டது.
• முதலாம் இராசராசன் காலந்தொட்டு மெய்க்கீர்த்திகள் கல்லில் வடிக்கப்பட்டுள்ளன.
• மெய்க்கீர்த்திகளே கல்வெட்டின் முதல்பகுதியில் மன்னரைப் பற்றிப் புகழ்ந்து இலக்கிய நயம்பட எழுதப்படும் வரிகள்.
• இவை புலவர்களால் எழுதப்பட்டுக் கல்தச்சர்களால் கல்லில் பொறிக்கப்பட்டவை.
பாடம் 7.4. சிலப்பதிகாரம் -இளங்கோவடிகள்
தெரியுமா?
பெருங்குணத்துக் காதலாள் நடந்த பெருவழி
• காவிரிப்பூம்பட்டினத்திலிருந்து கண்ணகியும் கோவலனும் உறையூர் மற்றும் திருவரங்கம் வழியாகக் கொடும்பாளூர் என்னும் இடத்தை அடைந்தனர்.
• தென்னவன் சிறுமலையின் வலப்பக்கம் வழியாகச் சென்றால் மதுரையை அடையலாம். இடப்பக்க வழியாகச் சென்றால் திருமால்குன்றம் (அழகர் மலை) வழியாக மதுரை செல்லலாம்.
• இவ்விரண்டுக்கும் இடைப்பட்ட வழியில், சோலைகள் மிகுந்த ஊர்களும் காடுகளும் உள்ளன.
• அவ்வழியாகச் சென்றால் மூன்று வழிகளும் சந்திக்கும் மதுரைப் பெருவழியை அடைந்து, மதுரை செல்லலாம். கோவலனையும் கண்ணகியையும் கவுந்தியடிகள் இடைப்பட்ட வழியிலேயே அழைத்துச் சென்றார்.
• மதுரையில் கணவனை இழந்த கண்ணகி, மதுரையிலிருந்து வைகையின் தென்கரை வழியாக நெடுவேள் குன்றம் (சுருளி மலை) சென்று வேங்கைக் கானல் என்னுமிடத்தை அடைந்தாள்.
நூல் வெளி
• சிலப்பதிகாரம், புகார்க்காண்டத்தின் இந்திரவிழா ஊரெடுத்த காதையிலிருந்து இப்பாடப்பகுதி எடுத்தாளப்பட்டுள்ளது.
• ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று சிலப்பதிகாரம்.
• இது முத்தமிழ்க்காப்பியம், குடிமக்கள் காப்பியம் என்றும் சிறப்பிக்கப்படுகிறது;
• மூவேந்தர் பற்றிய செய்திகளைக் கூறுகிறது.
• இது புகார்க்காண்டம், மதுரைக்காண்டம், வஞ்சிக்காண்டம் என மூன்று காண்டங்களையும் முப்பது காதைகளையும் உடையது;
• கோவலன், கண்ணகி, மாதவி வாழ்க்கையைப் பாடுவது. • மணிமேகலைக் காப்பியத்துடன் கதைத்தொடர்பு கொண்டிருப்பதால் இவையிரண்டும் இரட்டைக்காப்பியங்கள் எனவும் அழைக்கப்பெறுகின்றன.
• சிலப்பதிகாரத்தின் ஆசிரியர் இளங்கோவடிகள், சேர மரபைச் சேர்ந்தவர்.
• மணிமேகலையின் ஆசிரியர் சீத்தலைச்சாத்தனார் கோவலன் கண்ணகி கதையைக் கூறி, ‘அடிகள் நீரே அருளுக’ என்றதால் இளங்கோவடிகளும் ‘நாட்டுதும் யாம் ஓர் பாட்டுடைச்செய்யுள்' என இக்காப்பியம் படைத்தார் என்பர்.

இலக்கணக் குறிப்பு
• வண்ணமும் சுண்ணமும் - எண்ணும்மை
• பயில்தொழில் – வினைத்தொகை

சொல்லும் பொருளும்
• சுண்ணம் - நறுமணப்பொடி,
• காருகர் - நெய்பவர் (சாலியர்),
• தூசு - பட்டு துகிர் - பவளம்,
• வெறுக்கை - செல்வம், நொடை - விலை,
• பாசவர் - வெற்றிலை விற்போர்,
• ஓசுநர் – எண்ணெய் விற்போர்,
• கண்ணுள் வினைஞர் – ஓவியர்,
• மண்ணீட்டாளர் – சிற்பி, கிழி – துணி.

சரியான அகரவரிசையைத் தேர்ந்தெடுக்க.
அ) உழவு, மண், ஏர், மாடு
ஆ) மண் , மாடு , ஏர், உழவு,
இ) உழவு, ஏர், மண், மாடு
ஈ) ஏர், உழவு, மாடு, மண்
[விடை: உழவு, ஏர், மண், மாடு]

கருத்துரையிடுக

0 கருத்துகள்