நுழையும்முன்
வாழ்விலும் மொழியிலும் சில ஒழுங்குமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. வாழ்வுக்குரிய ஒழுங்குமுறை ஒழுக்கம் எனப்படும். மொழிக்குரிய ஒழுங்குமுறை மரபு எனப்படும். தமிழ்மொழிக்கெனச் சில மரபுகள் உள்ளன. அவை பழங்காலம் முதலே பின்பற்றப்பட்டு வருகின்றன. செய்யுளுக்கும் மரபுக்கும் உள்ள தொடர்பைப்பற்றித் தொல்காப்பியம் கூறும் செய்திகளை அறிவோம் வாருங்கள்!
நிலம் தீ நீர் வளி விசும்போடு ஐந்தும்
கலந்த மயக்கம் உலகம் ஆதலின்
இருதிணை ஐம்பால் இயல்நெறி வழாஅமைத்
திரிவுஇல் சொல்லொடு தழாஅல் வேண்டும் - தொல்.1579
மரபுநிலை திரிதல் செய்யுட்கு இல்லை.
மரபுவழிப் பட்ட சொல்லின் ஆன - தொல்.1580
மரபு நிலை திரியின் பிறிது பிறிதாகும்- தொல்.1581
- தொல்காப்பியர்
சொல்லும் பொருளும்
1. விசும்பு – வானம்
2. மயக்கம் – கலவை
3. இருதிணை – உயர்திணை, அஃறிணை
4. வழா அமை – தவறாமை
5. ஐம்பால் – ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால்
6. மரபு – வழக்கம்
7. திரிதல் – மாறுபடுதல்
8. செய்யுள் – பாட்டு
9. தழாஅல் – தழுவுதல் (பயன்படுத்துதல்)வானம்
பாடலின் பொருள்
இவ்வுலகம் நிலம், நீர், தீ, காற்று, வானம் ஆகிய ஐந்தும் கலந்த கலவையாகும். இவ்வுலகிவ் தோன்றிய பொருள்கள் அனைத்தும் இந்த ஐம்பூதங்களின் சேர்க்கையால் உருவானவையே ஆகும். உலகத்துப் பொருள்களை இரு திணைகளாகவும் ஐம்பால்களாகவும் பாகுபடுத்திக் கூறுதல் தமிழ்மொழியின் மரபு.
திணை, பால் வேறுபாடு அறிந்து, இவ்வுலகப் பொருள்களை நம் முன்னோர் கூறிய சொற்களால் கூறுதல் வேண்டும். இம்மரபான சொற்களையே செய்யுளிலும் பயன்படுத்துதல் வேண்டும்.
தமிழ்மொழிச் சொற்களை வழங்குவதில் இம்மரபு மாறினால் பொருள் மாறிவிடும்.
அளபெடை
புலவர்கள் சில எழுத்துகளை அவற்றுக்கு உரிய மாத்திரை அளவைவிட நீண்டு ஒலிக்குமாறு பயன்படுத்துவது உண்டு. இப்பாடலில் இடம்பெற்றுள்ள வழாஅமை தழாஅல் ஆகிய சொற்களில் உள்ள ழா என்னும் எழுத்தை மூன்று மாத்திரை அளவு நீட்டி ஒலிக்க வேண்டும். அதற்கு அடையாளமாகவே 'ழா'வை அடுத்து 'அ' இடம் பெற்றுள்ளது. இவ்வாறு உயிர் எழுத்து நீண்டு ஒலிப்பதை உயிரளபெடை என்பர். இதனைப் பற்றி உயர் வகுப்புகளில் விரிவாக அறிந்துகொள்ளலாம்.
நூல் வெளி
• தொல்காப்பியத்தின் ஆசிரியர் தொல்காப்பியர்.
• தமிழில் நமக்குக் கிடைத்துள்ள மிகப்பழமையான இலக்கண நூல் தொல்காப்பியம் ஆகும்.
• இந்நூல் எழுத்து, சொல், பொருள் என்னும் மூன்று அதிகாரங்களைக் கொண்டுள்ளது.
• ஒவ்வொரு அதிகாரமும் ஒன்பது இயல்களைக் கொண்டது.
• பொருளதிகாரத்தின் மரபியலில் உள்ள மூன்று நூற்பாக்கள் (91, 92,93) இங்குத் தரப்பட்டுள்ளன.
தெரிந்து தெளிவோம்
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. பறவைகள் ---------------- . பறந்து செல்கின்றன.
அ) நிலத்தில்
ஆ) விசும்பில்
இ) மரத்தில்
ஈ) நீரில்
[விடை : ஆ) விசும்பில்]
2. இயற்கையைப் போற்றுதல் தமிழர் ---------- .
அ) மரபு
ஆ) பொழுது
இ) வரவு
ஈ) தகவு
[விடை : அ) மரபு]
3. 'இருதிணை' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) இரண்டு + திணை
ஆ) இரு + திணை
இ) இருவர் + திணை
ஈ) இருந்து + திணை
[விடை : அ) இரண்டு + திணை]
4. 'ஐம்பால்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) ஐம் + பால்
ஆ) ஐந்து + பால்
இ) ஐம்பது + பால்
ஈ) ஐ + பால்
[விடை : ஆ) ஐந்து + பால்]
கற்பவை கற்றபின்
பறவைகளின் ஒலி மரபுகளை எழுதி வருக.
(எ.கா.) காரம் கரையும்.
● ஆந்தை அலறும்
● கிளி பேசும்
● குயில் கூவும்
● கூகை குழறும்
● கோழி கொக்கரிக்கும்
● சேவல் கூவும்
● புறா குனுகும்
● மயில் அகவும்
● வண்டு முரலும்
minnal vega kanitham