Type Here to Get Search Results !

8th tamil Chapter 1.1 தமிழ்மொழி வாழ்த்து

நுழையும்முன்

மொழி, கருத்தை அறிவிக்கும் கருவி மட்டும் அன்று; அது மக்களின் பண்பாட்டுடன் நெருங்கிய தொடர்புடையது; உணர்வுடன் கலந்தது. தமிழர்கள் தம் தாய்மொழியாகிய தமிழை உயிராகக் கருதிப் போற்றி வந்துள்ளனர். புலவர் பலர் தமிழைப் பல வகையாக வாழ்த்திப் பாடியுள்ளனர். அத்தகைய பாடல் ஒன்றை அறிவோம்.

*வாழ்க நிரந்தரம்! வாழ்க தமிழ்மொழி!

வாழிய வாழியவே!

வான மளந்தது அனைத்தும் அளந்திடு

வண்மொழி வாழியவே!

ஏழ்கடல் வைப்பினுந் தன்மணம் வீசி

இசைகொண்டு வாழியவே!

எங்கள் தமிழ்மொழி! எங்கள் தமிழ்மொழி!

என்றென்றும் வாழியவே!*

சூழ்கலி நீங்கத் தமிழ்மொழி ஓங்கத்

துலங்குக வையகமே!

தொல்லை வினைதரு தொல்லை அகன்று

சுடர்க தமிழ்நாடே!

வாழ்க தமிழ்மொழி! வாழ்க தமிழ்மொழி

வாழ்க தமிழ்மொழியே!

வானம் அறிந்த தனைத்தும் அறிந்து

வளர்மொழி வாழியவே! - பாரதியார்


இப்பாடலில் இடம்பெற்றுள்ள மோனைச் சொற்களை எடுத்தெழுதுக.

வாழ்க – வானமளந்த

வாழிய – வாழ்க

எங்கள் – என்றென்றும்

வண்மொழி – வளர்மொழி


சொல்லும் பொருளும்

நிரந்தரம் - காலம் முழுமையும்

வைப்பு - நிலப்பகுதி

சூழ்கலி - சூழ்ந்துள்ள அறியாமை இருள்

வண்மொழி - வளமிக்கமொழி

இசை - புகழ்

தொல்லை - பழமை, துன்பம்


பாடலின் பொருள்

தமிழ்மொழி எக்காலத்தும் நிலைபெற்று வாழ்க! ஆகாயத்தால் சூழப்பட்ட எல்லாவற்றையும் அறிந்து உரைக்கும் வளமான தமிழ்மொழி வாழ்க! ஏழு கடல்களால் சூழப்பட்ட நிலப்பகுதி முழுவதும் தன் இலக்கிய மணத்தைப் பரவச் செய்து, புகழ்கொண்ட தமிழ்மொழி வாழ்க! எங்கள் தாய்மொழியாகிய தமிழ்மொழி உலகம் உள்ள வரையிலும் வாழ்க! எங்கும் சூழ்ந்துள்ள அறியாமை இருள் நீங்கட்டும்! அதனால் தமிழ்மொழி மேன்மையுற்று உலகம் முழுதும் சிறப்படைக! பொருந்தாத பழைய கருத்துகளால் உண்டாகும் துன்பங்கள் நீங்கித் தமிழ்நாடு ஒளிர்க! தமிழ்மொழி வாழ்க! தமிழ்மொழி வாழ்க! என்றென்றும் தமிழ்மொழி வாழ்க! வானம்வரை உள்ளடங்கியுள்ள எல்லாப் பொருண்மைகளையும் அறிந்து மேன்மேலும் வளரும் தமிழ்மொழி வாழ்க!

நூல் வெளி
•  கவிஞர், எழுத்தாளர், இதழாளர், சமூகச் சீர்திருத்தச் சிந்தனையாளர், விடுதலைப் போராட்ட வீரர் எனப் பன்முக ஆற்றல் கொண்டவர் சி. சுப்பிரமணிய பாரதியார் 
•  இந்தியா, விஜயா முதலான இதழ்களை நடத்தி விடுதலைப் போருக்கு வித்திட்டவர். 
• கவிதைகள் மட்டுமன்றி, சந்திரிகையின் கதை, தராசு உள்ளிட்ட உரைநடை நூல்களையும் வசனகவிதைகளையும் சீட்டுக்கவிகளையும் எழுதியவர். 
• சிந்துக்குத் தந்தை, செந்தமிழ்த் தேனீ, புதிய அறம் பாட வந்த அறிஞன், மறம் பாட வந்த மறவன் என்றெல்லாம் பாரதிதாசன் இவரைப் புகழ்ந்துள்ளார்.
இப்பாடல் பாரதியார் கவிதைகள் என்னும் தொகுப்பில் தமிழ்மொழி வாழ்த்து என்னும் தலைப்பில் இடம் பெற்றுள்ளது

Book Back 
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. மக்கள் வாழும் நிலப்பகுதியைக் குறிக்கும் சொல்
அ) வைப்பு
ஆ) கடல்
இ) பரவை
ஈ) ஆழி
[விடை : அ) வைப்பு]

2. 'என்றென்றும்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) என் + றென்றும்
ஆ) என்று + என்றும்
இ) என்றும் + என்றும்
ஈ) என் + என்றும்
[விடை : ஆ) என்று + என்றும்]

3. 'வானமளந்தது' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) வான + மளந்தது
ஆ) வான் + அளந்தது
இ) வானம் + அளந்தது
ஈ) வான் + மளந்தது
[விடை : இ) வானம் + அளந்தது]

4. அறிந்தது + அனைத்தும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்
அ) அறிந்தது அனைத்தும்
ஆ) அறிந்தனைத்தும்
இ) அறிந்ததனைத்தும்
ஈ) அறிந்துனைத்தும்
[விடை : இ) அறிந்ததனைத்தும்]

5. வானம் + அறிந்த என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்
அ) வானம்அறிந்து
ஆ) வான்அறிந்த
இ) வானமறிந்த
ஈ) வான்மறிந்த
[விடை : இ) வானமறிந்த]

படித்துச் சுவைக்க.
செந்தமிழ் அந்தாதி
செந்தமிழே! செங்கரும்பே! செந்தமிழர் சீர்காக்கும்
நந்தா விளக்கனைய நாயகியே! - முந்தை
மொழிக்கெல்லாம் மூத்தவனே! மூவேந்தர் அன்பே!
எழில்மகவே! எந்தம் உயிர்.
உயிரும்நீ; மெய்யும்நீ; ஓங்கும் அறமாம்
பயிரும்நீ; இன்பம்நீ; அன்புத் தருவும்நீ;
வீரம்நீ: காதல்நீ; ஈசன் அடிக்குநல்
ஆரம்நீ; யாவும்நீ யே!- து. அரங்கன்
மொழிகருத்தை அறிவிக்கும் கருவி மட்டும் அன்றுஅது மக்களின் பண்பாட்டுடன் நெருங்கிய தொடர்புடையதுஉணர்வுடன் கலந்தது. தமிழர்கள் தம் தாய்மொழியாகிய தமிழை உயிராகக் கருதிப் போற்றி வந்துள்ளனர். புலவர் பலர் தமிழைப் பல வகையாக வாழ்த்திப் பாடியுள்ளனர். அத்தகைய பாடல் ஒன்றை அறிவோம்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.