Type Here to Get Search Results !

8th தமிழ் இயல் 4 வேற்றுமை 2025 TNTET Paper – 2 தமிழ் 1 கேள்விகள் உறுதி

8th தமிழ் இயல் 4: வேற்றுமை

1) பெயர்ச்சொல்லின் பொருளை வேறுபடுத்தும் முறையை ----- என்பர்?

விடை:வேற்றுமை

2) பெயர்ச்சொல்லுடன் இணைக்கப்படும் அசைகளை ----- என்று கூறுவர்?

விடை:வேற்றுமை உருபுகள்

தெரிந்து தெளிவோம்

சில இடங்களில் உருபுகளுக்குப் பதிலாக முழுச்சொற்களே வேற்றுமை உருபாக வருவதும் உண்டு. அவற்றைச் சொல்லுருபுகள் என்பர்.

(எ.கா.) ஓவியர் தூரிகையால் ஓவியம் தீட்டினார். இதில் 'ஆல்' என்பது வேற்றுமை உருபாக வந்துள்ளது.

(எ.கா.) ஓவியர் தூரிகை கொண்டு ஓவியம் தீட்டினார். இதில் 'கொண்டு' என்பது சொல்லுருபாக வந்துள்ளது.

3) வேற்றுமை எத்தனை வகைப்படும்?

விடை:எட்டு (அவை) முதல் வேற்றுமை, இரண்டாம் வேற்றுமை, மூன்றாம் வேற்றுமை, நான்காம் வேற்றுமை, ஐந்தாம் வேற்றுமை, ஆறாம் வேற்றுமை, ஏழாம் வேற்றுமை, எட்டாம் வேற்றுமை.

4) முதல் வேற்றுமைக்கும், எட்டாம் வேற்றுமைக்கு?

விடை:உருபுகள் இல்லை

5) இரண்டாம் வேற்றுமை முதல் ஏழாம் வேற்றுமை முடிய ஆறு வேற்றுமைக்கு?

விடை:உருபுகள் உண்டு

தெரிந்து தெளிவோம்

வேற்றுமை உருபுகள் இடம் பெற்றுள்ள தொடர்களை வேற்றுமைத் தொடர்கள் என்பர்.

வேற்றுமை உருபுகள் இடம் பெற வேண்டிய இடத்தில் அஃது இடம்பெறாமல் மறைந்திருந்து பொருள் தந்தால் அதனை வேற்றுமைத்தொகை என்பர்.

6) முதல் வேற்றுமை

பெரும்பாலான சொற்றொடர்களில் எழுவாய், செயப்படுபொருள், பயனிலை ஆகிய மூன்று உறுப்புகள் இடம் பெற்றிருக்கும்.

எழுவாயுடன் வேற்றுமை உருபுகள் எதுவும் இணையாமல் எழுவாய் தனித்து நின்று இயல்பான பொருளைத் தருவது முதல் வேற்றுமை ஆகும்.

முதல் வேற்றுமையை எழுவாய் வேற்றுமை என்றும் குறிப்பிடுவர்.

(எ.கா.) பாவை வந்தாள்.

7) இரண்டாம் வேற்றுமை

இரண்டாம் வேற்றுமை உருபு என்பதாகும்.

i) கபிலர் பரணரைப் புகழ்ந்தார்.

ii) கபிலரைப் பரணர் புகழ்ந்தார்.

இவ்விரு தொடர்களையும் கவனியுங்கள்.

இரண்டாம் வேற்றுமை உருபு (ஐ) எந்தப் பெயருடன் இணைகிறதோ அப்பெயர் செயப்படுபொருளாக மாறிவிடுகிறது.

இவ்வாறு ஒரு பெயரைச் செயப்படுபொருளாக வேறுபடுத்திக் காட்டுவதால் இரண்டாம் வேற்றுமையைச் செயப்படுபொருள் வேற்றுமை என்றும் கூறுவர்.

இரண்டாம் வேற்றுமை ஆக்கல், அழித்தல், அடைதல், நீத்தல், ஒத்தல், உடைமை ஆகிய ஆறு வகையான பொருள்களில் வரும்:

i) ஆக்கல் - கரிகாலன் கல்லணையைக் கட்டினான்

ii) அழித்தல் - பெரியார் மூடநம்பிக்கைகளை ஒழித்தார்

iii) அடைதல் - கோவலன் மதுரையை அடைந்தான்

iv) நீத்தல் - காமராசர் பதவியைத் துறந்தார்

v) ஒத்தல் - தமிழ் நமக்கு உயிரைப் போன்றது

vi) உடைமை - வள்ளுவர் பெரும் புகழை உடையவர்

8) மூன்றாம் வேற்றுமை

ஆல், ஆன், ஒடு, ஓடு ஆகிய நான்கும் மூன்றாம் வேற்றுமைக்கு உரிய உருபுகள் ஆகும். இவற்றுள் ஆல், ஆன் ஆகியவை கருவிப்பொருள், கருத்தாப் பொருள் ஆகிய இரண்டு வகையான பொருள்களில் வரும்.

கருவிப் பொருள் முதற்கருவி, துணைக்கருவி என இருவகைப்படும்.

கருவியே செய்யப்படும் பொருளாக மாறுவது முதற்கருவி - (எ.கா.) மரத்தால் சிலை செய்தான்.

ஒன்றைச் செய்வதற்குத் துணையாக இருப்பது துணைக்கருவி - (எ.கா.) உளியால் சிலை செய்தான்.

கருத்தாப்பொருள் ஏவுதல் கருத்தா, இயற்றுதல் கருத்தா என இருவகைப்படும்.

பிறரைச் செய்யவைப்பது ஏவுதல் கருத்தா - (எ.கா.) கரிகாலனால் கல்லணை கட்டப்பட்டது.

தானே செய்வது இயற்றுதல் கருத்தா - (எ.கா.) சேக்கிழாரால் பெரியபுராணம் இயற்றப்பட்டது.

'ஆன்' என்னும் உருபு பெரும்பாலும் செய்யுள் வழக்கில் இடம்பெறும். (எ.கா.) புறந்தூய்மை நீரான் அமையும்.

'ஒடு', 'ஓடு' ஆகிய மூன்றாம் வேற்றுமை உருபுகள் உடனிகழ்ச்சிப் பொருளில் வரும்.

(எ.கா.) தாயொடு குழந்தை சென்றது. / அமைச்சரோடு அலுவலர்கள் சென்றனர்.

9) நான்காம் வேற்றுமை

நான்காம் வேற்றுமைக்கு உரிய உருபு கு என்பதாகும்.

இது கொடை, பகை, நட்பு, தகுதி, அதுவாதல், பொருட்டு, முறை, எல்லை எனப் பல பொருள்களில் வரும்.

i) கொடை - முல்லைக்குத் தேர் கொடுத்தான்.

ii) பகை – புகை மனிதனுக்குப் பகை.

iii) நட்பு – கபிலருக்கு நண்பர் பரணர்.

iv) தகுதி - கவிதைக்கு அழகு கற்பனை.

v) அதுவாதல் - தயிருக்குப் பால் வாங்கினான்.

vi) பொருட்டு - தமிழ்வளர்ச்சிக்குப் பாடுபட்டார்.

vii) முறை - செங்குட்டுவனுக்குத் தம்பி இளங்கோ.

viii) எல்லை - தமிழ்நாட்டுக்குக் கிழக்கு வங்கக்கடல்.

தெரிந்து தெளிவோம்

நான்காம் வேற்றுமை உருபுடன் கூடுதலாக ஆக என்னும் அசை சேர்ந்து வருவதும் உண்டு. (எ.கா.) கூலிக்காக வேலை.

10) ஐந்தாம் வேற்றுமை

இன், இல் ஆகியவை ஐந்தாம் வேற்றுமை உருபுகள் ஆகும்.

இவை நீங்கல், ஒப்பு, எல்லை, ஏது போன்ற பொருள்களில் வரும்.

i) நீங்கல் - தலையின் இழிந்த மயிர்

ii) ஒப்பு - பாம்பின் நிறம் ஒரு குட்டி.

iii) எல்லை - தமிழ்நாட்டின் கிழக்கு வங்கக்கடல்.

iv) ஏது - சிலேடை பாடுவதில் வல்லவர் காளமேகம்.

11) ஆறாம் வேற்றுமை

அது, ஆது, அ ஆகியவை ஆறாம் வேற்றுமை உருபுகள் ஆகும்.

இவ்வேற்றுமை, உரிமைப் பொருளில் வரும். உரிமைப் பொருளைக் கிழமைப் பொருள் என்றும் கூறுவர்.

(எ.கா.) இராமனது வில். நண்பனது கை.

ஆது, அ ஆகிய உருபுகளை இக்காலத்தில் பயன்படுத்துவது இல்லை.

12) ஏழாம் வேற்றுமை

ஏழாம் வேற்றுமைக்கு உரிய உருபு கண்.

மேல், கீழ், கால், இல், இடம் போன்ற உருபுகளும் உண்டு.

இடம், காலம் ஆகியவற்றைக் குறிக்கும் சொற்களில் ஏழாம் வேற்றுமை உருபு இடம்பெறும்.

(எ.கா.) எங்கள் ஊரின்கண் மழை பெய்தது.

(எ.கா.) இரவின்கண் மழை பெய்தது.

தெரிந்து தெளிவோம்

இல் என்னும் உருபு ஐந்தாம் வேற்றுமையிலும் ஏழாம் வேற்றுமையிலும் உண்டு.

நீங்கல் பொருளில் வந்தால் ஐந்தாம் வேற்றுமை என்றும், இடப் பொருளில் வந்தால் ஏழாம் வேற்றுமை என்றும் கொள்ள வேண்டும்.

13) எட்டாம் வேற்றுமை

இது விளிப்பொருளில் வரும்.

படர்க்கைப் பெயரை முன்னிலைப் பெயராக மாற்றி அழைப்பதையே விளி வேற்றுமை என்கிறோம்.

இவ்வேற்றுமைக்கு என்று தனியே உருபு கிடையாது.

பெயர்கள் திரிந்து வழங்குவது உண்டு.

(எ.கா.) அண்ணன் என்பதை அண்ணா என்றும், புலவர் என்பதைப் புலவரே என்றும் மாற்றி வழங்குவது எட்டாம் வேற்றுமை ஆகும்.

வேற்றுமை உருபுகளும் அவற்றின் பொருள்களும்
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1) பெயர்ச்சொல்லின் பொருளை வேறுபடுத்துவது
(A) எழுவாய்
(B) செயப்படுபொருள்
(C) பயனிலை
(D) வேற்றுமை ✔
2) எட்டாம் வேற்றுமை ……………………. வேற்றுமை என்று அழைக்கப்படுகிறது.
(A) எழுவாய்
(B) செயப்படுபொருள்
(C) விளி ✔
(D) பயனிலை
3) உடனிகழ்ச்சிப் பொருளில் ………………………….. வேற்றுமை வரும்.
(A) மூன்றாம் ✔
(B) நான்காம்
(C) ஐந்தாம்
(D) ஆறாம்
4) ‘அறத்தான் வருவதே இன்பம்’ – இத்தொடரில் …………………….. வேற்றுமை பயின்று வந்துள்ளது.
(A) இரண்டாம்
(B) மூன்றாம்✔
(C) ஆறாம்
(D) ஏழாம்
5) ‘மலர் பானையை வனைந்தாள்’ – இத்தொடர் …………………….. பொருளைக் குறிக்கிறது.
(A) ஆக்கல்✔
(B) அழித்தல்
(C) கொடை
(D) அடைதல்
பொருத்துக.
1. மூன்றாம் வேற்றுமை – அ) இராமனுக்குத் தம்பி இலக்குவன்
2. நான்காம் வேற்றுமை – ஆ) பாரியினது தேர்
3. ஐந்தாம் வேற்றுமை – இ) மண்ணால் குதிரை செய்தான்
4. ஆறாம் வேற்றுமை – ஈ) ஏவுதல் கலையில் சிறந்தவன் ஏகலைவன்
விடை: இ, அ, ஈ, ஆ✔
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.