Type Here to Get Search Results !

கொடுக்கப்பட்ட பத்தியிலிருந்து கேட்கப்பட்ட வினாக்களுக்கு சரியான விடையைத் தேர்ந்தெடுத்தல் || 8th தமிழ் இயல் - 1 to 9 (New & Old) Part -2

0
9) விளம்பரங்கள் / அறிவிப்புகள் பார்த்துப் பொருளுணர்ந்து வினாக்களுக்கு விடையளிக்க.

வினாக்கள்
1. இவ்விளம்பரம் எதனைப் பற்றியது?
– நவராத்திரிக் கொலு பொம்மை விற்பனைக் கண்காட்சி

2. இவ்விளம்பரத்தில் விற்பனை செய்யப்படும் பொருள்கள் யாவை?
– கொல்கத்தாப் பொம்மைகள், கோலாப்பூர்ப் பொம்மைகள், கொலுப் படிகள்

3. விற்பனை எங்கு நடைபெறுகிறது?
– சென்னைச் சர்வோதய சங்கம் காதி கிராமோத்யாக் பவன், 33, அரங்கநாதன் தெரு, தி.நகர், சென்னை-17

4. விற்பனை செய்யப்படும் கால அளவைக் குறிப்பிடுக.
- காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை

5. இவ்விளம்பரத்தை வெளியிடுவோர் யார்?
- சென்னைச் சர்வோதய சங்கம் காதி கிராமோத்யாக் பவன்

10) விளம்பரங்கள் / அறிவிப்புகள் பார்த்துப் பொருளுணர்ந்து வினாக்களுக்கு விடையளிக்க.

வினாக்கள்
1. இந்த விளம்பரம் எதனைப்பற்றியது?
– வேலைவாய்ப்பு பற்றியது.

2. வேலைவாய்ப்பு வழங்கும் நிறுவனம் எங்கு அமைந்துள்ளது?
- சென்னை

3. விண்ணப்பிப்போர் பெற்றிருக்கவேண்டிய தகுதிகள் யாவை?
– முதுகலை நிருவாகவியலில் பட்டமும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தங்கு தடையின்றிப் பேசத் தெரிந்திருத்தல் வேண்டும்.

4. நேர்காணல் எப்போது?
– 15.09.2025 காலை 10.00 மணி

5. விண்ணப்பிக்கும் பணியின் பெயர் என்ன?
- வரவேற்பாளர்கள்


11) கீழ்க்காணும் பாடலைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க.
நாடும் மொழியும் நமதிரு கண்கள்
நாம்தினம் போற்றி வணங்கிடு வோமே
கூடும் அன்பினில் வேற்றுமை மறந்தே
குலவிடு வோமே இந்தியர் என்றே
தேடிய சுதந்தரப் பயிரின் வேலி
தூயநல் ஒருமைப் பாடே ஆகும்
ஓடிடும் வேற்றுமை நோயே உரிய
ஒருமைப் பாடெனும் மாமருந் தாலே.
வினாக்கள்
1. நமது இரு கண்களாகக் கருதப்படுவன யாவை?
நாடும் மொழியும் நமது இருகண்களாகக் கருதப்படுகின்றன.

2. தினம் என்பதற்குரிய இணையான தமிழ்ச்சொல்லை எழுதுக?
நாள்

3. வேற்றுமை என்பதன் எதிர்ச்சொல் யாது?
ஒற்றுமை

4. பாடலில் இடம்பெற்றுள்ள உரிச்சொல்லை எடுத்து எழுதுக?
மாமருந்து

5. சுதந்தரம் - சுதந்திரம் இவ்விரண்டனுள் எது சரி?
சுதந்தரம்.

12) கீழுள்ள பாடலைப் படித்துப் பொருளுணர்ந்து வினாக்களுக்கு விடையளிக்க.
நல்லொழுக்கம் ஒன்றே - பெண்ணே நல்ல நிலை சேர்க்கும்
புல்லொழுக்கம் தீமை - பெண்ணே
பொய்யுரைத்தல் தீமை
இல்லறமே பெண்ணே- இங்கு
நல்லற மென்பார்கள்
கல்வியுடையோரே - பெண்ணே
கண்ணுடைய ராவார்.
வினாக்கள்
1. நல்ல நிலை சேர்ப்பது எது?
- நல்லொழுக்கம்

2. பாடலில் உள்ள விளிச்சொல்லை எடுத்து எழுதுக.
- பெண்ணே

3. துறவறம் என்பதன் எதிர்ச்சொல்லை எழுதுக.
- இல்லறம்

4. கண்ணுடையவர் என்பவர் யார்?
- கற்றவர்

5. தீமை என்பதன் எதிர்ச்சொல்லை எழுதுக.
- நன்மை

13) கீழ்க்காணும் உரைப்பத்தியைச் சொல்லக் கேட்டு, வினாக்களுக்கு விடையளிக்க.
கவியரசு வேங்கடாசலனார், நகைச்சுவையுணர்வு மிக்கவர். கேட்பவர் விரும்புமாறு நயமாகவும் சிலேடையாகவும் பேசும் திறனுடையவர். ஒருமுறை, திருவையாறு அரசர் கல்லூரியில் நடைபெற்ற ஆண்டுவிழாவுக்குக் கவியரசர் சென்றார். அவ்விழாவில், சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்த பேச்சாளர், 'தமிழ்மொழியை இன்று செந்தமிழ் என்று சொல்கிறோம். செந்தமிழ் எனக் கூறுவதால், ஒருகாலத்தில் தமிழ்மொழி கொடுந்தமிழாக இருந்திருத்தல் வேண்டும்' என்றார்.
அவர் கூறுவதனைக் கேட்ட கவியரசு வேங்கடாசலனார், உடனே எழுந்து 'கதிரவனை இந்நாளில் செஞ்ஞாயிறு எனக் கூறுகிறோம். செஞ்ஞாயிறு என்பதனால், ஒருகாலத்தில் கருஞாயிறாகத்தான் இருந்திருத்தல் வேண்டும் என்பதனை இப்பேச்சாளரின் கூற்று வெளிப்படுத்துகிறது' எனக்கூறினார். அவர் கூறியதனைக் கேட்ட தமிழறிஞர்கள், கைகளைத் தட்டிக் குரலொலி எழுப்ப, சொற்பொழிவாற்றிய பேச்சாளர் தலைகுனிந்தார்.
மற்றொருமுறை, கவியரசுவின் திருமண விழாவுக்கு வர இயலாத நண்பர், அவரை நேரில் கண்டு வருத்தத்தைத் தெரிவித்தார். பின்னர், 'திருமணம் சிறப்பாக நடந்ததா?" எனக் கவியரசுவிடம் வினவினார். நண்பருக்குப் பதிலளித்த கவியரசு, 'ஆம், மிகவும் நன்றாக நடந்தது. நான் ஒரு முகமதியப் பெண்ணை மணந்து கொண்டேன்' என்றார். அதனைக் கேட்ட நண்பர், வியப்புடன் கவியரசுவை நோக்கினார். அவரது முகக்குறிப்பினை உணர்ந்து கொண்ட கவியரசு, 'உண்மைதான். முகம் மதியம் போன்று விளங்கும் பெண்ணைத்தான் திருமணம் செய்து கொண்டேன்' எனச் சிலேடையாகக் கூற, நண்பர் கவியரசுவின் சொல்லாடலைக் கேட்டு இன்புற்றார்.
வினாக்கள்
1. கவியரசு வேங்கடாசலனார் எத்தன்மையுடையவர்?
– நகைச்சுவை உணர்வும் கேட்பவர் விரும்புமாறு நயமாக பேசும் தன்மையுடையவர்

2. திருவையாறு அரசர் கல்லூரி ஆண்டுவிழாவில், சொற்பொழிவாளர் பேசிய உரை யாது?
– தமிழ்மொழியை இன்ற செந்தமிழ் என்று சொல்கிறோம். செந்தமிழ் எனக் கூறுவதால் ஒரு காலத்தில் தமிழ்மொழி கொடுந்தமிழாக இருந்திருத்தல் வேண்டும்.

3. சொற்பொழிவாளர் கூறிய செய்தியைக் கவியரசு எங்ஙனம் மறுத்துரைத்தார்?
- 'கதிரவனை இந்நாளில் செஞ்ஞாயிறு எனக் கூறுகிறோம். செஞ்ஞாயிறு என்பதனால், ஒருகாலத்தில் கருஞாயிறாகத்தான் இருந்திருத்தல் வேண்டும் என்பதனை இப்பேச்சாளரின் கூற்று வெளிப்படுத்துகிறது' எனக் கூறி மறுத்துரைத்தார்.

4. நண்பரிடம், கவியரசு கூறிய சிலேடை நயத்தைக் கூறுக.
– முகமதியப் பெண், முதம் மதியம் போன்று விளங்கும் பெண்

5. 'பலகை'-இச்சொல்லுக்குச் சிலேடை நயம் காண்க.
- பல கை, மரப்பலகை

14)
பண்டைத்தமிழர் நாகரிகத்திலும் பண்பாட்டிலும் சிறந்து விளங்கினர். செல்வத்தை மிகுதியாகப் பெற்றிருந்தோர், இல்லாதவருக்குக் கொடுத்து உதவினர். இன்றிருந்து நாளை மடியும் பொருட்செல்வத்தினும், நின்று நிலவும் அறச்செல்வமே உயர்ந்தது என்பதனை நன்கு உணர்ந்திருந்தனர். நால்வகைப் படையுடைய அரசனேயானாலும், அறநெறியே அவனுக்குச் சிறப்பைத் தரும் என்னும் கருத்தில் அசையா நம்பிக்கை வைத்திருந்தனர். அமிழ்தமே கிடைப்பினும், அதனைத் தனித்து உண்ணாமல், பிறருக்கு உவந்தளிப்பவரைப் பசிப்பிணி மருத்துவர் என அழைத்து மகிழ்ந்தனர்.
மனித இனம் முழுவதனையும் ஒன்றாகக் காணும் மனம் படைத்திருந்தனர். யாதும் ஊரே யாவரும் கேளிர் என்னும் பொதுவுடைமைக் கொள்கையைப் பின்பற்றி வாழ்ந்தனர். தன்னிலையில் தாழாமையும் தாழ்வு ஏற்படின் உயிர் வாழாமையும் மானமெனக் கருதினர்.
வினாக்கள்
1. பண்டைத்தமிழர், அறச்செல்வமே உயர்ந்தது எனக் கருதக் காரணம் என்ன?
– இன்றிருந்து நாளை மடியும் பொருட்செல்வத்தினும் நின்று நிலவும் அறச்செல்வமே உயர்ந்தது எனக்கருதினர்.

2. அரசனுக்கு நால்வகைப் படையைக்காட்டிலும் சிறப்பைத் தருவது எது ?
- அறநெறி

3. பிறருக்கு உவப்புடன் உணவளித்தோரை எவ்வாறு அழைத்தனர்?
– பசிப்பிணி மருத்துவர்

4. தமிழரின் மானம் எத்தகையது?
– மனித இனம் முழுவதனையும் ஒன்றாகக் காணும் மனம் படைத்திருந்தனர்.

5. உரைப்பத்திக்கு ஏற்புடைய தலைப்பைத் தருக.
– பண்டைத்தமிழர் வாழ்வியல்


15) கீழ்க்காணும் உரைப்பத்தியைச் சொல்லக் கேட்டு, வினாக்களுக்கு விடையளிக்க.
'தென்றல் அசைந்துவரும் தென்தமிழ்நாட்டில் அமைந்த திருக்குற்றாலம், மலைவளம் படைத்த பழம்பதியாகும். அம்மலையிலே கோங்கும் வேங்கையும் ஒங்கி வளரும். குரவமும் முல்லையும் நறுமணங் கமழும். கோலமாமயில் தோகை விரித்தாடும். தேனுண்ட வண்டுகள் தமிழ்ப் பாட்டிசைக்கும். அத்தகைய மலையினின்று விரைந்து வழிந்து இறங்கும் வெள்ளருவி வட்டச் சுனையிலே வீழ்ந்து பொங்கும்பொழுது சிதறும் நீர்த்திவலைகள் பாலாவிபோற் பரந்து எழுந்து மஞ்சினோடு சேர்ந்து கொஞ்சிக் குலாவும். வேனிற்காலத்தில் திருக்குற்றால மலையில் வீசும் மெல்லிய பூங்காற்று மருந்துச் செடிகொடிகளின் நலங்களைக் கவர்ந்து வருதலால், நலிந்த உடலைத் தேற்றும் நன்மருந்தாகும்'.
வினாக்கள்
1. தென்தமிழ்நாட்டில் மலைவளம் படைத்த பழம்பதி எது?
– திருக்குற்றாலம்.

2. உரைப்பத்தியில் இடம்பெற்றுள்ள மரங்களின் பெயர்களைக் கூறுக.
– கொங்கு மற்றும் வேங்கை

3. தமிழ்ப் பாட்டிசைக்கும் உயிரினம் எது?
- வண்டுகள்

4. அருவியினின்று சிதறும் நீர்த்திவலைகளுக்குக் கூறப்பட்ட உவமை யாது?
- பாலாவி

5. திருக்குற்றால மலையில் வீசும் மெல்லிய பூங்காற்றின் பயன் யாது?
– நலிந்த உடலைத் தேற்றும் மருந்தாகும்.

16) கீழ்க்காணும் உரைப்பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க.
நாம் அறிவியல் தொழில்நுட்பத்தை மிகுதியாகப் பயன்படுத்தி வருகின்றோம். உடனுக்குடன் செய்திகளைப் பெறவும், பிறருக்கு அனுப்பவும் பல்வேறு ஊடகங்களைப் பயன்படுத்துகிறோம். சான்றாகத் தொலைபேசி, வானொலி, தொலைக்காட்சி, கைப்பேசி, கணினி, இணையத்தளம் போன்றவற்றைக் கூறலாம். நமக்கு நன்மையைத் தரக்கூடிய ஊடகங்களைத் தவறாகப் பயன்படுத்துவது சைபர் குற்றம் என அழைக்கப்படுகிறது. கைப்பேசி வாயிலாக, ஒருவரைப்பற்றித் தரக்குறைவாகச் சித்திரித்தல், அவருக்குத் தெரியாமல், அவரைப் புகைப்படம் எடுத்தல், அவருடைய ஒப்புதலின்றி புகைப்படத்தையும், முகவரியையும், கைப்பேசி எண்ணையும் இணையத்தளத்தில் வெளியிடுதல், அவரைப்பற்றித் தவறான செய்திகளை மற்றவர்களுக்குக் குறுஞ்செய்தியாக அனுப்புதல், சமுதாயத்தில் குழப்பத்தை விளைவிக்கும் எண்ணத்தில், இணையத்தளத்தில் மின்னஞ்சல் வாயிலாகவோ கைப்பேசியில் குறுஞ்செய்தி வாயிலாகவோ அனைவருக்கும் தவறான செய்திகளை அனுப்புதல் போன்ற செயல்களைச் சைபர் குற்றம் என அழைக்கின்றனர்.
ஒருமுறை, சிலருடைய கைப்பேசியில் ஒரு குறுஞ்செய்தி பரவியது. “கைகளில் மருதாணி வைத்துக் கொள்பவர்களுக்கு ஒவ்வாமை ஏற்படுகிறது”, எனத் தவறான செய்தி பரவியது. அச்செய்தியில், எள்ளளவும் உண்மையில்லை. சமுதாயத்தில் சீர்குலைவு ஏற்படுத்துதலே, இச்செய்தியைப் பரப்பியவரின் நோக்கமாக இருந்துள்ளது. விளையாட்டாகச் செய்தியைப் பரப்புவதும் சைபர் குற்றமே. நாம் விழிப்புணர்வுடன் இருந்து இத்தகைய செய்திகளைப் புறக்கணித்தல் வேண்டும். குற்றம் செய்பவர்களிடமிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ளுதல் வேண்டும்.
வினாக்கள்
1. நாம் பயன்படுத்தும் ஊடகங்களின் பெயர்களைக் கூறுக
- தொலைபேசி, வானொலி, தொலைக்காட்சி, கைப்பேசி, கணினி, இணையதளம்.

2. ஊடகங்களின் பயன்களுள் இரண்டனைக் கூறுக.
- உடனுக்குடன் செய்திகளை அனுப்ப மற்றும் பெறுவதற்கு

3. சைபர் குற்றம் என்பது யாது?
ஊடகங்களை தவறாக பயன்படுத்துவது சைபர் குற்றம் என்கிறோம்.

4. சைபர் குற்றங்களுள் இரண்டனைக் கூறுக.
– ஊடகங்களை தவறாக பயன்படுத்தி ஒருவருக்கு தெரியாமல் அவரைப் புகைப்படம் எடுத்தல், அவருடைய அனுமதியின்றி புகைப்படத்தையும் முகவரியையும் கைப்பேசி எண்ணையும் இணையதளத்தில் வெளியிடுதல்

5. ஊடகத்தின் வாயிலாகத் தவறான செய்தி பரவும்போது, நாம் செய்யவேண்டியது என்ன?
- நாம் விழிப்புணர்வுடன் இருந்து இத்தகைய தவறான செய்திகளை புறக்கணித்தல் வேண்டும்.

17) கொடுக்கப்பட்டுள்ள வினாக்களுக்கு விடை எழுதுக.
படத்தில் நீங்கள் காணும் பறவை மரகதப் புறாவாகும். தமிழ்நாட்டின் தேசியப் பறவையாக இது விளங்குகிறது. இப்பறவை மழைக்காடுகளிலும், அடர்ந்த ஈரமான இடங்களிலும் வாழ்கின்றது. இப்பறவையின் இறக்கைகள் மரகதப்பச்சை நிறத்தில் இருக்கும்.மரகதப்புறா, பறப்பதனைவிட நிலத்தில் நடப்பதனையே மிகவும் விரும்புகிறது. இப்பறவை விதைகள், பழங்கள், பல்வேறுவகையான தாவரங்களை விரும்பி உண்ணும். இப்பறவை மரங்களில் கூடுகட்டி, முட்டையிடுகிறது. இப்பறவையின் முட்டை மஞ்சள் கலந்த வெண்ணிறத்தில் காணப்படும். இப்பறவை எளிதாகப் பழகக்கூடிய வகையில் உள்ளது. இப்பறவை மரங்களில் கூடுகட்டி, முட்டையிடுகிறது. இப்பறவையின் முட்டை மஞ்சள் கலந்த வெண்ணிறத்தில் காணப்படும். இப்பறவை எளிதாகப் பழகக்கூடிய வகையில் உள்ளது.
வினாக்கள்
1. தமிழ்நாட்டின் தேசியப் பறவை எது?
- மரகதப் புறா

2. மரகதப்புறா எங்கு வாழ்கிறது?
-மழைக்காடுகளிலும் அடர்ந்த ஈரமான இடங்களிலும் வாழ்கிறது.

3. மரகதப்புறா எதனை விரும்பி உண்கிறது?
– விதைகள், பழங்கள், பல்வேறுவகையான தாவரங்கள்

4. மரகதப்புறா முட்டையின் நிறம் யாது?
– மஞ்சள் கலந்த வெண்ணிறம்

5. நிரப்புக. மரகதப்புறா, பறப்பதனைவிட ______ விரும்புகிறது.
- நிலத்தில் நடப்பதனையே

கருத்துரையிடுக

0 கருத்துகள்