1) கீழ்க்காணும் உரைப் பகுதியைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க. |
---|
பண்டைக்காலத்தில் அரசன் போர் செய்யக் கருதியவுடன், அவனது போர்ப்பறை முழங்கும். அப்பறையின் ஓசை நாற்றிசையையும் அதிரச் செய்யும். அவ்வோசையைக் கேட்ட போர்வீரர்கள் போர்க்கோலம் பூண்டு மிக்க ஆர்வத்தோடு போருக்குப் புறப்படுவார்கள். தேர்ப்படை, யானைப்படை, குதிரைப்படை, காலாட்படை ஆகிய நாற்படைகளும் திரண்டெழும். அரசன் படைத்தலைவரோடு சென்று அவற்றைப் பார்த்து மகிழ்வான்.
போர் செய்யப் புறப்படுவதற்கு முன்பாக அரசன், தன் அரண்மனையில் வீரர்களுக்குப் பெருவிருந்து அளிப்பான். அதனைப் 'பெருஞ்சோறு அளித்தல்' என்பர். சேனை புறப்பட்டுச் செல்லும் வழியில் அரசனும் படைத்தலைவர்களும் தங்குதற்குரிய பாடி வீடுகள் அமைக்கப்பட்டிருக்கும். அங்கு அரசனும் வீரரும் இளைப்பாறுவர். அப்பொழுது ஆடலும் பாடலும் நடைபெறும். வினாக்கள் 1. நாற்றிசை, நாற்படை - இத்தொகைச்சொற்களை விரித்தெழுதுக. -நான்கு+திசை, நான்கு+படை 2. உம் சேர்ந்திருக்கும் பெயர்ச்சொற்களை எடுத்தெழுதுக. - அரசனும் வீரனும் 3. பெருஞ்சோறு அளித்தல் என்றால் என்ன? - போர் செய்யப் புறப்படுவதற்கு முன்பாக அரசன், தன் அரண்மனையில் வீரர்களுக்குப் பெருவிருந்து அளிப்பான். அதனைப் 'பெருஞ்சோறு அளித்தல்' என்பர் |
2) உரைப்பத்தியைப் படிக்கக் கேட்டு வினாக்களுக்கு விடையளிக்க. |
---|
காவிரியின் தென்கரையில் அமைந்துள்ள நகரம் திருச்சிராப்பள்ளி. இந்நகரம் கோவில்களும் நினைவுச்சின்னங்களும் நிறைந்துள்ள வரலாற்று நகரமாகும். இதன் பழம்பெருமைக்குச் சான்றாகத் திகழ்வது மலைக்கோட்டை. இக்கோட்டையிலுள்ள பல்லவர் காலத்துச் சிற்பங்கள் காண்போரைக் கவரும் தன்மையன. திருச்சிராப்பள்ளியைத் தமிழ் மன்னர்கள் மட்டுமன்றி முகலாயர்கள், விசயநகர மன்னர்கள், மராட்டியர்கள், ஆங்கிலேயர்கள் ஆண்டுள்ளார்கள். சோழர்களின் தலைநகராக விளங்கிய உறையூர், திருச்சிக்கு அருகில் அமைந்துள்ள பண்டைய நகரமாகும். இவ் உறையூர் முற்காலத்தில் கோழிமாநகரம் என்று அழைக்கப்பட்டது. திரிசிரபுரம் என்று தொன்மைக்காலத்தில் அழைக்கப்பட்ட திருச்சியில், ஈராயிரம் ஆண்டுப் பழைமை வாய்ந்த கவின்மிகு கல்லணை, காவிரியாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. இந்தியப் பொறியியல் சாதனைகளிலே மேம்பட்டு நிற்கும் இக்கல்லணை, பண்டைத்தமிழரின் நீர் மேலாண்மைச் சிந்தனையின் சிகரமாகும். திருச்சியின் சுற்றுலா இடங்களாக முக்கொம்பு, ஊமையன்கோட்டை, புளியஞ்சோலை, பச்சைமலை முதலியன உள்ளன. தாயுமானவருக்கு ஞானநெறி காட்டிய மௌனகுருவும், தமிழின் முதல் சிறுகதை எழுத்தாளரான வ.வே.சுப்பிரமணியமும் திருச்சி மண்ணில் தோன்றியவராவர். வினாக்கள் 1. காவிரியின் தென்கரையில் அமைந்துள்ள நகரம் திருச்சிராப்பள்ளி. (ஆம்/இல்லை) ஆம் 2. மலைக்கோட்டையில் உள்ள சிற்பங்கள் பாண்டியர் காலத்தவை. ( ஆம் / இல்லை) இல்லை 3. பல்லவர்களின் தலைநகரம் உறையூர். (ஆம் / இல்லை) இல்லை 4. பண்டைத் தமிழரின் நீர் மேலாண்மைக்குச் சான்று கல்லணை. (ஆம் / இல்லை) ஆம் 5. தமிழின் முதல் சிறுகதை எழுத்தாளர் வ. வே. சுப்பிரமணியம். ( ஆம் / இல்லை) ஆம் |
3) கீழ்க்காணும் உரைப்பத்தியைப் படிக்கக் கேட்டு வினாக்களுக்கு விடையளிக்க. |
---|
விவேகானந்தர் அமெரிக்காவிலுள்ள ஒரூரில் தங்கியிருந்தார். அங்கு நீரோடையைக் கடப்பதற்கு ஒரு பாலம் இருந்தது. விவேகானந்தர், அந்நீரோடைக் கரையில் ஒருநாள் நடந்து சென்று கொண்டிருந்தார். அங்கு இளைஞர் சிலர், முட்டை ஒடுகளைத் துப்பாக்கியால் குறிவைத்துச் சுடுவதற்குப் பயிற்சி மேற்கொண்டிருந்தனர். அவர்கள், முட்டை ஓடுகளை ஒரு நூலில் கட்டி நீரோடையில் மிதக்கவிட்டிருந்தனர். அந்நூல், நீரோடைக் கரையிலிருந்த சிறிய கல்லில் கட்டப்பட்டிருந்தது. நீரின் அசைவுக்கு ஏற்ப நூலில் கட்டப்பட்டிருந்த முட்டை ஓடுகள் மெதுவாக அசைந்துகொண்டிருந்தன. அவ்விளைஞர்கள், பாலத்தில் நின்றுகொண்டு ஓடையில் அசைந்து கொண்டிருக்கும் முட்டை ஓடுகளைச் சுடுவதற்கு முயற்சி செய்துகொண்டிருந்தார்கள். அவர்கள் துப்பாக்கியால் முட்டை ஓடுகளைச் சுட்டனர். ஆனால், அவர்கள் வைத்த குறி தப்பிப் போயிற்று. ஒரு முட்டை ஒட்டைக்கூட அவர்களால் சுட இயலவில்லை. இளைஞர்களின் இந்தச் செயலைப் பார்த்தார் விவேகானந்தர். அவர் முகத்தில் புன்னகை தவழ்ந்தது. இதனை அங்கிருந்த இளைஞருள் ஒருவன் கண்டான். அவன் விவேகானந்தரிடம் இந்த முட்டை ஓடுகளைச் சுடுவதனைப் பார்ப்பதற்கு எளிதான செயல்போன்று தோன்றும்; ஆனால், நீங்கள் நினைப்பதுபோல் அவ்வளவு எளிதானதன்று. நீங்களே முயற்சி செய்து பாருங்கள். அப்போது உங்களுக்கே தெரியும் எனக் கூறினான். விவேகானந்தர் துப்பாக்கியைக் கையிலெடுத்தார். அப்போது அங்குப் பன்னிரண்டு முட்டை ஓடுகள் மட்டுமே நீரோடையில் மிதந்து கொண்டிருந்தன. விவேகானந்தர் அவற்றைச் சுட, அவை அனைத்தும் தூள்தூளாகிச் சிதறின. இதனைப் பார்த்த இளைஞர்கள் பெரிதும் வியப்படைந்தார்கள். 'ஐயா, நீங்கள் துப்பாக்கி சுடுவதில் மிகவும் பயிற்சி பெற்றவராய் இருத்தல் வேண்டும். அதனால்தான், நீங்கள் அத்தனை முட்டை ஓடுகளையும் குறி தவிராமல் சுட்டீர்கள்' எனக் கூறினார்கள். அதற்கு விவேகானந்தர், 'என் வாழ்நாளில் இன்றுதான் முதன்முறையாகத் துப்பாக்கியைத் தொடுகிறேன்' எனக் கூறினார். அவர் கூறியதனை இளைஞர்களால் நம்பமுடியவில்லை. 'அப்படியென்றால், உங்களால் எப்படிக் குறி தவறாமல் அத்தனை முட்டை ஒடுகளையும் சுடமுடிந்தது' எனக் கேட்டனர். அதற்குப் பதிலளித்த விவேகானந்தர், மனத்தை ஒருமுகப்படுத்துவதில்தான் அனைத்தும் இருக்கிறது. அவ்வாறு செய்யும்போது, எந்தவொரு செயலும் வெற்றியைத் தரும் என்றார்.
வினாக்கள் 1. பத்தியின் மையக் கருத்து யாது? – மனதை ஒருமுகப்படுத்துவது. 2. பத்தியில் குறிப்பிடப்படுபவர் புகழ்மிக்கவர். அவர் பெயர் என்ன? - விவேகானந்தர் 3. நீரோடைக் கரையில் இளைஞர்கள் என்ன செய்துகொண்டிருந்தனர்? – துப்பாக்கியால் நீரோடையில் மிதக்கும் முட்டை ஓடுகளை சுடுவதற்கு தயாராகிக் கொண்டிருந்தனர். 4. விவேகானந்தர் முட்டை ஓடுகளைக் குறி தவிராமல் சுட்டதனைக் கண்டு இளைஞர்கள் கூறியது என்ன? துப்பாக்கி சுடுவதில் நீங்கள் மிகவும் பயிற்சி பெற்றவராய் இருத்தல் வேண்டும் என்று கூறினர். 5. பத்திக்குப் பொருத்தமான தலைப்பு தருக. – அமெரிக்காவில் விவேகானந்தர் |
4) கீழ்க்காணும் உரைப்பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க. |
---|
தமிழகத்தின் சிறப்பு மரம் பனைமரமாகும். புன்செய் நில வரப்புகளின்மீது பனை மரங்களை உழவர்கள் வளர்த்தார்கள். போக்குவரத்துக்காகப் பொதுமக்கள் பயன்படுத்தும் சாலையை வேறு யாரும் கைப்பற்றிவிடுதல் கூடாது என்பதற்காகச் சாலையின் இருமருங்கிலும் பனைமரங்களை வளர்த்தனர். ஏரி, குளம், வாய்க்கால் முதலியவற்றின் கரைகளின்மீது மண் அரிப்பைத் தடுப்பதற்காகவும் அதன் உறுதித் தன்மைக்காகவும் பனைமரங்கள் பெருமளவில் வளர்க்கப்பட்டன. பனைமரங்கள் தரும் நுங்கு, பதநீர், கற்கண்டு முதலியன மனித உடலுக்குப் பெரும் நன்மையைச் செய்வன. மேலும், இடி மின்னல்களைத் தாங்கிக் கொண்டு நம் வாழ்வைக் காப்பன. பெரும்பான்மைத் தமிழர் அன்று முதல் இன்று வரை பனைமரத்தின் ஓலைகளால்தான் கூரைவேய்ந்து வாழ்கிறார்கள். இவ்வாறு தமிழர்தம் வாழ்வோடு இணைந்திருக்கும் பனைமரங்கள் இன்று அழிவின் விளிம்பில் நின்று கொண்டிருக்கின்றன. விளைநிலங்கள் வீட்டுமனைகளாக மாறும்போது, அந்நிலங்களிலுள்ள பனைமரங்களே முதல் களப்பலியாகின்றன. மேலும், செங்கல் சூளைகளுக்காகப் பல்லாண்டுக்காலம் நெடிதுயர்ந்த பனைமரங்கள் பெருமளவில் வெட்டிச் சாய்க்கப்படுகின்றன. பனைமரங்கள் சல்லிவேர்களைக் கொண்டிருப்பதனால், கட்டடங்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படுவது இல்லை. பனைமரங்கள் மிகுதியான நீரைக்கூட உறிஞ்சுவது இல்லை. இவ்வாறு தமிழகத்தின் சிறப்பு மரமாக உள்ள பனைமரத்தைக் காத்தலும் வளர்த்தலும் தமிழர் ஒவ்வொருவரின் கடமையாகும்.
வினாக்கள் 1. தமிழகத்தின் சிறப்பு மரம் ஆலமரம். (உண்மை /பொய்) பொய் 2. மனித உடலுக்கு நன்மைதரும் பொருள்களைப் பனைமரங்கள் தருகின்றன. (உண்மை/பொய்) உண்மை 3. பனைமரங்கள் மண்ணரிப்பைத் தடுக்கும். (உண்மை /பொய்) உண்மை 4. பனைமரங்கள் உங்கள் வீட்டுக்கு அருகில் வளர்ந்தால் அவை கட்டடத்தைப் பாதிக்கும். (உண்மை/பொய்) பொய் 5. பனைமரங்கள் மிகுதியான நீரை உறிஞ்சி நிலத்தடி நீர் மட்டத்தைக் குறைத்துவிடும். (உண்மை/பொய்) பொய் |
5) |
---|
விவேகானந்தர் நமது நாட்டின் வீரத்துறவி. அவர்தம் பேச்சு இந்திய இளைஞர்களின் மனத்தில் வீர உணர்ச்சியைத் தூண்டியது. ஒவ்வோர் இளைஞருக்குள்ளும் பொதிந்து கிடக்கும் ஆற்றலை வெளிக் கொண்டு வந்து அவர்களைச் செயல் வீரர்களாக மாற்றியது. "இளைஞர்கள் பிறரிடமிருந்து நல்லவற்றை ஏற்றுக்கொள்ளுதல் வேண்டும். அப்போதுதான் வளரமுடியும். நீங்கள் கடவுளின் குழந்தைகள். சிங்கங்களே! எழுந்து வாருங்கள். நீங்கள் செம்மறி ஆடுகள் என்ற மயக்கத்தை உதறித்தள்ளுங்கள்" என்று விவேகானந்தர் இளைஞர்களை நோக்கி வீரமுழக்கமிட்டார். அவர்தம் உரையினைக் கேட்ட இளைஞர்கள் துடித்தெழுந்தார்கள்; நாட்டிற்கு அரும் பெரும் தொண்டாற்றினார்கள்.
வினாக்கள் 1. இளைஞர்களின் வீர உணர்ச்சியைத் தட்டி எழுப்பாதவர் விவேகானந்தர் (சரி / தவறு) தவறு 2. இளைஞர்கள் கடவுளின் குழந்தைகள் (சரி / தவறு) சரி 3. பிறரிடமிருந்து நல்லன அல்லாதவற்றை ஏற்றுக் கொள்ளுதல் வேண்டும் (சரி /தவறு) தவறு 4. இளைஞர்கள் செம்மறி ஆடுகள் அல்லர், சிங்கங்கள் (சரி/தவறு) சரி 5. இளைஞர்கள் நாட்டுக்குத் தொண்டாற்றுதல் வேண்டும் (சரி / தவறு) சரி |
6) |
---|
பாண்டித்துரை சொற்பொழிவு ஆற்றுவதில் வல்லவர். இவர் மதுரைக்குச் சென்ற போது மதுரை அன்பர் சிலர், இவரைச் சொற்பொழிவு ஆற்றுமாறு வேண்டிக்கொண்டனர். இதற்காகத் திருக்குறளையும் கம்பராமாயணத்தையும் ஒருமுறை படித்துவிட்டுப் பேச எண்ணினார். இவ்விரு நூல்களையும் அன்பரிடம் கேட்டார். ஆனால், அன்பர்களோ அந்நூல்கள் தங்களிடம் இல்லை என்று கூறினர். இதனால் பாண்டித்துரை வருத்தமுற்றார். இந்நிலை மாற ஓர் அரிய திட்டத்தைத் தீட்டியது அவர் மனம். அத்திட்டத்தின் விளைவாகத்தான் 1901ஆம் ஆண்டு செப்டம்பர்த் திங்கள் பதினான்காம் நாள் ஞாயிற்றுக்கிழமையன்று பிற்பகலில் மதுரையிலுள்ள சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் நான்காம் தமிழ்ச்சங்கத்தைத் தோற்றுவித்தார். இச்சங்கம் தமிழை வளர்த்ததோடு மட்டுமன்றித் தமிழ் வளர்க்கும் புலவர் பெருமக்களையும் வளர்த்தும் காத்தும் வந்தது. தமிழ்கூறும் நல்லுலகம் போற்றும் வகையில் நான்காம் தமிழ்ச்சங்கம் கண்டெடுத்த பாண்டித்துரையின் புகழ் தாய்த்தமிழ் உள்ளவரை நிலைத்திருக்கும்.
“தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை" - பாரதிதாசன். வினாக்கள் 1. பாண்டித்துரை சென்ற ஊர் மதுரை. (சரி/தவறு) சரி 2. அன்பர் பாண்டித்துரையிடம் பாடலொன்று பாடுமாறு கேட்டுக்கொண்டனர். (சரி/தவறு) தவறு 3. பாண்டித்துரை அன்பர்களிடம் திருக்குறளையும் கம்பராமாயணத்தையும் கேட்டார். (சரி/தவறு) சரி 4. மதுரையிலுள்ள சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் நான்காம் தமிழ்ச்சங்கம் தோற்றுவிக்கப்பட்டது. (சரி/தவறு) சரி 5. 1910ஆம் ஆண்டு நான்காம் தமிழ்ச்சங்கம் தோற்றுவிக்கப்பட்டது. (சரி/தவறு) தவறு |
7) பின்வரும் பத்திகளைப் படித்து, கேட்கப்பட்டுள்ள வினாக்களுக்கு விடையளிக்க |
---|
சாலை விபத்துகளைத் தவிர்க்கச் சாலைவிதிகளை அறிந்து ஒவ்வொருவரும் வாகனங்களை ஓட்ட வேண்டும்.
சாலையில் வாகனங்களை இடப்புறமாகவே செலுத்த வேண்டும். இருவழிச் சாலையின் மையத்தில் விட்டுவிட்டுப் போடப்பட்டுள்ள வெள்ளைக்கோடு இரு போக்குவரத்துக்காகச் சாலை சரிசமமாகப் பிரிக்கப்பட்டுள்ளதைக் குறிக்கும். வாகனங்களை முந்துவதற்குக் கோட்டுக்கு வலது பக்கம் உள்ள சாலையைப் பயன்படுத்திக் கொள்ள அனுமதி உண்டு. இருவழிச் சாலையின் மையத்தில் தொடர்ச்சியாக வெள்ளை அல்லது மஞ்சள் கோடு வரையப்பட்டிருந்தால் முந்துவதற்கு வலது பக்கச் சாலையைப் பயன்படுத்தக்கூடாது. இரட்டை மஞ்சள்கோடு வரையப்பட்டிருந்தால் முந்துவதற்கு எக்காரணம் கொண்டும் வலது பக்கச் சாலையைப் பயன்படுத்தக் கூடாது.
ஒருவழிப்பாதை என்று குறிப்பிடப்பட்டுள்ள சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள திசையில் மட்டுமே வாகனங்களைச் செலுத்த வேண்டும். தடக்கோடுகள் இடப்பட்டுள்ள சாலையில் தடத்தின் உள்ளேயே வாகனங்களைச் செலுத்த வேண்டும். வாகனத்தைப் பின்தொடரும்போது மிகவும் நெருக்கமாகப் பின்தொடரக் கூடாது. திரும்பும் போது சைகை காட்ட அடையாள விளக்கை ஒளிரச் செய்ய வேண்டும்.
வினாக்கள் 1. சாலையின் எந்தப் பக்கமாக வாகனங்களைச் செலுத்த வேண்டும்? - இடப்புறம் 2. விட்டுவிட்டுப் போடப்படும் வெள்ளைக்கோடு எதனைக் குறிக்கும்? – இரு போக்குவரத்துக்காகச் சாலை சரிசமமாகப் பிரிக்கப்பட்டுள்ளது என்பதைக் குறிக்கும். 3. எந்தக் கோட்டைத் தாண்டி வாகனங்களை முந்திச் செல்ல அனுமதி இல்லை? – மஞ்சள் கோடு 4. ஒருவழிப் பாதை எனப்படுவது யாது? – குறிப்பிட்டுள்ள சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள திசையில் மட்டுமு வாகனங்கள் செலுத்த வேண்டும். 5. வாகனங்களைப் பின்தொடர்வதற்கான முறையைக் கூறுக. – மிகவும் நெருக்கமாகப் பின்தொடரக் கூடாது. |
8) பாடலைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க. |
---|
பனை மரமே பனை மரமே
ஏன் வளந்தே இத் தூரம்? குடிக்கப் பதனியானேன்! தூரத்து மக்களுக்குத் கொண்டு விற்க நுங்கானேன்! தூதோலை நானானேன்! அழுகிற பிள்ளைகட்குக் கிலுகிலுப்பை நானானேன்! கைதிரிக்கும் கயிறுமானேன்! கன்றுகட்டத் தும்புமானேன்! -நாட்டுப்புறப்பாடல் வினாக்கள் 1. பனை மரம் தரும் உணவுப் பொருள்கள் யாவை? – பதனி, நுங்கு 2. பனை மரம் யாருக்குக் கிலுகிலுப்பையைத் தரும்? - குழந்தைகளுக்கு 3. 'தூதோலை' என்னும் சொல்லைப் பிரித்து எழுதுக. – துாது+ஓலை 4. பனைமரம் மூலம் நமக்குக் கிடைக்கும் பொருள்களைப் பட்டியலிடுக. - பதனி, நுங்கு, துாதோலை, கிலுகிலுப்பை, கயிறு, தும்பு 5. பாடலுக்கு ஏற்ற தலைப்பை எழுதுக. - பனைமரம் |
minnal vega kanitham