Type Here to Get Search Results !

தொடர் வகைகள்

1
தொடர் வகைகள் (8th New Tamil Book)
அறிந்து பயன்படுத்துவோம்.
தொடர் வகைகள்
தொடர்கள் பொருள் அடிப்படையில் நான்கு வகைப்படும்.
செய்தித் தொடர்
ஒரு செய்தியைத் தெளிவாகக் கூறும் தொடர் செய்தித் தொடர் ஆகும்.
(எ.கா.) கரிகாலன் கல்லணையைக் கட்டினான்.
வினாத்தொடர்
ஒருவரிடம் ஒன்றை வினவுவதாக அமையும் தொடர் வினாத்தொடர் ஆகும்
(எ.கா) சிலப்பதிகாரத்தை இயற்றியவர் யார்?
விழைவுத் தொடர்
ஏவல், வேண்டுதல், வாழ்த்துதல், வைதல் ஆகிய பொருள்களில் வரும் தொடர் விழைவுத் தொடர் ஆகும்.
(எ.கா.) இளமையில் கல். (ஏவல்)
உன் திருக்குறள் நூலைத் தருக. (வேண்டுதல்)
உழவுத்தொழில் வாழ்க. (வாழ்த்துதல்)
கல்லாமை ஒழிக. (வைதல்)

உணர்ச்சித் தொடர்
உவகை, அழுகை, அவலம், அச்சம், வியப்பு முதலான உணர்ச்சிகளை உணர்த்தும் தொடர் உணர்ச்சித் தொடர் எனப்படும்.
(எ.கா.) அடடா! என் தங்கை பரிசு பெற்றாள்! (உவகை)
ஆ! புலி வருகிறது! (அச்சம்)
பழந்தமிழ் இலக்கியங்கள் பல அழிந்துவிட்டனவே! (அவலம்)
ஆ! மலையின் உயரம்தான் என்னே!

கொடுக்கப்பட்டுள்ள தொடர்களின் வகையைக் கண்டறிந்து எழுதுக.
1. முக்காலமும் உணர்ந்தவர்கள் நம் முன்னோர்கள். செய்தித்தொடர்
2. கடமையைச் செய். விழைவுத்தொடர்
3. பாரதியார் பாடல்களின் இனிமைதான் என்னே! உணர்ச்சித் தொடர்
4. நீ எத்தனை புத்தகங்களைப் படித்திருக்கிறாய்? வினாத்தொடர்
தொடர்களை மாற்றுக. (வியப்பு)
எ.கா: நேற்று நம் ஊரில் மழை பெய்தது. (வினாத் தொடராக மாற்றுக)
நேற்று நம் ஊரில் மழை பெய்ததா?
1. காடு மிகவும் அழகானது. (உணர்ச்சித் தொடராக மாற்றுக)
விடை : என்னே , காட்டின் அழகு!
2. அந்தோ! பூனையின் காலில் அடிபட்டுவிட்டதே! (செய்தித்தொடராக மாற்றுக.)
விடை : பூனையின் காலில் அடிபட்டுவிட்டது.
3. அதிகாலையில் துயில் எழுவது நல்லது. (விழைவுத் தொடராக மாற்றுக.)
விடை : அதிகாலையில் துயில் எழு.
4. முகில்கள் திரண்டால் மழை பெய்யும் அல்லவா? (செய்தித்தொடராக மாற்றுக)
விடை : முகில்கள் திரண்டால் மழை பெய்யும்.
5. காட்டில் புலி நடமாட்டம் உள்ளது. (வினாத்தொடராக மாற்றுக.)
விடை : காட்டில் புலி நடமாட்டம் உள்ளதா?

தொடர் வகைகள் (8th Old Tamil Book)
சொற்றொடர் வகைகள்
செய்வினை - செயப்பாட்டு வினை
(எ.கா.)
கயல்விழி திருக்குறளைப் படித்தாள் - செய்வினைத் தொடர்
கயல்விழி - எழுவாய்
திருக்குறளை - செயப்படுபொருள்
படித்தாள் - பயனிலை
இத்தொடரைச் செயப்பாட்டுவினையாக்க,
• எழுவாயைச் செயப்படுபொருளாக்குதல் வேண்டும்
• அதனுடன் மூன்றாம் வேற்றுமை உருபு சேர்த்தல் வேண்டும்.(கயல்விழி + ஆல் கயல்விழியால் செயப்படுபொருளில் உள்ள 'ஐ' என்ற வேற்றுமை உருபை நீக்கி, எழுவாயாக மாற்றுதல் வேண்டும். (திருக்குறளை - திருக்குறள் + ஐ = ஐ நீக்கினால், திருக்குறள்)
• பயனிலையுடன் படு, பட்டது என்னும் துணைவினை சேர்த்தல் வேண்டும். (படித்தாள் - படிக்கப்பட்டது)
திருக்குறள் கயல்விழியால் படிக்கப்பட்டது - செயப்பாட்டு வினைத்தொடர்.
செயப்பாட்டு வினை - செய்வினை
(எ.கா.)
i) குறிஞ்சிக்கலி கபிலரால் இயற்றப்பட்டது - செயப்பாட்டுவினை
ii) கபிலர் குறிஞ்சிக்கலியை இயற்றினார் -செய்வினை இவ்வாறு செயப்பாட்டுவினைத் தொடரையும் செய்வினைத் தொடராக மாற்றலாம்.
பயிற்சி :
1. கீழ்க்காணும் தொடர்களைச் செயப்பாட்டு வினையாக்குக.
அ) கலையரசி துணியைத் தைத்தாள்.
ஆ) ஆசிரியர் பாடத்தை நடத்தினார்.
இ) பூங்குழலி உணவைச் சமைத்தாள்.
2. கீழ்க்காணும் தொடர்களைச் செய்வினையாக்குக.
அ) ஒவியம் மாறனால் வரையப்பட்டது.
ஆ) மாலை மல்லிகாவினால் தொடுக்கப்பட்டது.
இ) பாரி கபிலரால் போற்றப்பட்டார்.
2. செய்தி வெளிப்படும் திறன்
தொடர்களில் செய்தி வெளிப்படும் தன்மையினைப் பொருத்துச் செய்தித்தொடர், வினாத்தொடர், விழைவுத்தொடர், உணர்ச்சித்தொடர் எனப் பலவகைப்படுத்தலாம். விழைவுத்தொடர் வாழ்த்துதல், வேண்டுதல், கட்டளையிடுதல், வைதல் ஆகிய பொருள்களில் வரும்.
(எ.கா.)
'முயற்சி திருவினையாக்கும்' என்பது ஆன்றோர் மொழி செய்தித்தொடர்
பாடம் படித்தாயா? - வினாத்தொடர்
நீடூழி வாழ்க! - விழைவுத்தொடர்
என்னே, அருவியின் அழகு! - உணர்ச்சித்தொடர்
கண்ணன் பாடம் படித்தான். - உடன்பாட்டுத்தொடர் (செய்தி)
கண்ணன் பாடம் படித்திலன். - எதிர்மறைத்தொடர் (செய்தி)
பயிற்சி:
1. கீழ்க்காணும் தொடர்கள் எவ்வகையைச் சேர்ந்தவை?
அ) தென்னை மரத்துக்குக் கிளைகள் இல்லை.
ஆ) இந்தச் செயலைச் செய்தது யார்?
இ) இளமையில் கல்.
ஈ) என்னே,தமிழின் இனிமை!
உ) சிறந்த நூல்களை அரங்கேற்றுதல் பண்டைக்கால வழக்கம்.
2. கீழ்க்காணும் தொடர்களை அடைப்புக்குறிக்குள் உள்ளவாறு மாற்றுக.
அ) உழைத்துப் பிழை (செய்தித் தொடராக்குக)
ஆ) மாமல்லபுரத்துச் சிற்பங்கள் மிகவும் அழகாக உள்ளன. (உணர்ச்சித்தொடராக்குக.)
இ) மணிமொழி நன்கு பாடினாள். (பொருள் மாறாமல் எதிர்மறையாக்குக.)
ஈ) கமலா பரிசு பெற்றாள். (வினாத்தொடராக்குக.)
உ) நினைவாற்றலை வளர்த்துக்கொள்க. (கட்டளைத்தொடராக்குக.)

கருத்துரையிடுக

1 கருத்துகள்
  1. இந்த வலைதளத்தில் பாடங்களைப் படித்துக் கொண்டிருக்கும் பொழுது அளவில்லாத விளம்பரம் வந்து கொண்டிருக்கிறது இதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்

    பதிலளிநீக்கு
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

minnal vega kanitham