Type Here to Get Search Results !

அடிப்படை உரிமை [10th சமூக அறிவியல்]

10வது சமூக அறிவியல்: குடிமையியல்: அலகு - 1: இந்திய அரசியலமைப்பு
அடிப்படை உரிமை (10th சமூக அறிவியல்)
1. இந்திய அரசியலமைப்புச் சட்டம் பகுதி (III) 12ல் இருந்து 35 வரையுள்ள சட்டப்பிரிவுகள் அடிப்படை உரிமைகள் பற்றி கூறுகின்றன.
2. அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் இந்த அடிப்படை உரிமைகளை அமெரிக்க ஐக்கிய நாடுகளின் அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகளின் தாக்கத்தால் உருவாக்கினார்கள்.
3. முதலில் இந்திய அரசியலமைப்பு ஏழு அடிப்படை உரிமைகளை வழங்கியது. ஆனால், தற்போது ஆறு அடிப்படை உரிமைகள் மட்டுமே உள்ளன.
4. இந்திய அரசியலமைப்பின் பகுதி (III) ‘இந்தியாவின் மகாசாசனம்’ என அழைக்கப்படுகிறது.
5. இந்தியாவில் வசிக்கும் மக்கள் அனைவருக்கும் அடிப்படை உரிமைகள் பொதுவானது. ஆனால் இந்திய குடிமக்களுக்கு மட்டுமேயான சில அடிப்படை உரிமைகளும் உள்ளன.

இந்திய அரசியலமைப்பால் வழங்கப்படும் அடிப்படை உரிமைகளை பட்டியலிடுக.
• சமத்துவ உரிமை (பிரிவு 14 - 18)
• சுதந்திர உரிமை (பிரிவு 19 - 22)
• சுரண்டலுக்கெதிரான உரிமை (பிரிவு 23 - 24)
• சமயச் சார்பு உரிமை (பிரிவு 25 - 28)
• கல்வி, கலச்சார உரிமை (பிரிவு 29 - 30)
• அரசியலமைப்புக்குட்பட்டு தீர்வு காணும் உரிமை (பிரிவு 32)

I. சமத்துவ உரிமை
• பிரிவு 14 - சட்டத்தின் முன் அனைவரும் சமம்.
• பிரிவு 15- மதம், இனம், சாதி, பாலினம் மற்றும் பிறப்பிடம் இவற்றின் அடிப்படையில் பாகுபடுத்துவதைத் தடை செய்தல்.
• பிரிவு 16 - பொது வேலைவாய்ப்புகளில் சமவாய்ப்பளித்தல். பிரிவு 17 - தீண்டாமையை ஒழித்தல்.
• பிரிவு 18 - இராணுவ மற்றும் கல்விசார் பட்டங்களைத் - தவிர மற்ற பட்டங்களை நீக்குதல்.

II. சுதந்திர உரிமை
• பிரிவு 19 - பேச்சுரிமை, கருத்து தெரிவிக்கும் உரிமை, அமைதியான முறையில் கூட்டம் கூடுவதற்கு உரிமை, சங்கங்கள், அமைப்புகள் தொடங்க உரிமை, இந்திய நாட்டிற்குள் விரும்பிய இடத்தில் வசிக்கும் மற்றும் தொழில் செய்யும் உரிமை.
• பிரிவு 20 - குற்றஞ்சாட்டப்பட்ட நபர்களுக்கான உரிமை மற்றும் தண்டனைகளிலிருந்து பாதுகாப்பு பெறும் உரிமை.
• பிரிவு 21 - வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட சுதந்திரத்திற்குப் பாதுகாப்பு பெறும் உரிமை.
• பிரிவு 21 A - தொடக்கக்கல்வி பெறும் உரிமை.
• பிரிவு 22 - சில வழக்குகளில் கைது செய்து, தடுப்புக் காவலில் வைப்பதற்கெதிரான பாதுகாப்பு உரிமை.
உங்களுக்குத் தெரியுமா?
• 2002ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட, 86வது அரசியலமைப்புச் சட்டத்திருத்தத்தின்படி, இந்திய அரசியலமைப்பின் பிரிவு 45 திருத்தப்பட்டு, பிரிவு 21A வின் கீழ் தொடக்கக்கல்வி, அடிப்படை உரிமையாகச் சேர்க்கப்பட்டுள்ளது.
• இந்தத் திருத்தம், மாநில அரசுகள் முன்பருவ மழலையர் கல்வியை (Early Childhood Care and Education - ECCE) 6 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு வழங்க அறிவுறுத்துகிறது.

III. சுரண்டலுக்கெதிரான உரிமை
• பிரிவு 23 - கட்டாய வேலை, கொத்தடிமை முறை மற்றும் மனிதத்தன்மையற்ற வியாபாரத்தைத் தடுத்தல்.
• பிரிவு 24 - தொழிற்சாலைகள் மற்றும் ஆபத்தான இடங்களில் குழந்தைத் தொழிலாளர் முறையைத் தடுத்தல்.

IV. சமயச்சார்பு உரிமை
• பிரிவு 25 - எந்த ஒரு சமயத்தினை ஏற்கவும், பின்பற்றவும், பரப்பவும் உரிமை.
• பிரிவு 26 - சமய விவகாரங்களை நிர்வகிக்கும் உரிமை.
• பிரிவு 27 - எந்தவொரு மதத்தையும் பரப்புவதற்காக வரி செலுத்துவதற்கெதிரான சுதந்திரம்.
• பிரிவு 28 - மதம் சார்ந்த கல்வி நிறுவனங்களில் நடைபெறும் வழிபாடு மற்றும் அறிவுரை நிகழ்வுகளில் கலந்து கொள்ளாமலிருக்க உரிமை

V. கல்வி, கலாச்சார உரிமை
• பிரிவு 29 - சிறுபான்மையினரின் எழுத்து, மொழி, மற்றும் கலாச்சாரப் பாதுகாப்பு.
• பிரிவு 30 – சிறுபான்மையினரின் கல்வி நிறுவனங்களை நிறுவி, நிர்வகிக்கும் உரிமை.
உங்களுக்குத் தெரியுமா?
• 1978ஆம் ஆண்டு, 44ஆவது அரசியலமைப்புச் சட்டத் திருத்தப்படி, அடிப்படை உரிமைகள் பட்டியலிலிருந்து சொத்துரிமை (பிரிவு 31) நீக்கப்பட்டது.
• இது இந்திய அரசியலமைப்புச் சட்டம் பகுதி XII, பிரிவு 300 A வின் கீழ் ஒரு சட்ட உரிமையாக வைக்கப்பட்டுள்ளது.

VI. அரசியலமைப்புக்குட்பட்டு தீர்வு காணும் உரிமை
• பிரிவு 32 - தனிப்பட்டவரின், அடிப்படை உரிமைகள் பாதிக்கப்படும் போது, நீதிமன்றத்தை அணுகி உரிமையைப் பெறுதல்.

அரசியலமைப்புக்குட்பட்டு தீர்வு காணும் உரிமை (சட்டப்பிரிவு - 32)
• நீதிமன்ற முத்திரையுடன், நீதிமன்றத்தால் வெளியிடப்படும் கட்டளை அல்லது ஆணை நீதிப்பேராணை எனப்படும்.
• இது சில சட்டங்களை நிறைவேற்றாமல் தடைசெய்ய, நீதிமன்றத்தால் வெளியிடப்படும் ஆணையாகும். உச்ச நீதிமன்றம் மற்றும் உயர்நீதி மன்றங்கள்
• இரண்டுமே ஐந்து வகையான நீதிப்பேராணைகளை வெளியிட அதிகாரம் பெற்றுள்ளன.
• இது போன்ற ஆணைகளை வெளியிட்டு மக்களின் உரிமைகளைக் காப்பதினால் உச்சநீதிமன்றம் ‘அரசியலமைப்பின் பாதுகாவலன்’ என அழைக்கப்படுகிறது.
• டாக்டர். B.R. அம்பேத்கரின் கூற்றுப்படி அரசியலமைப்பு சட்டப்பிரிவு 32, இந்திய அரசியலமைப்பின் ‘இதயம் மற்றும் ஆன்மா’ ஆகும்.
அ) ஆட்கொணர்வு நீதிப்பேராணை (Habeas corpus)
• சட்டத்திற்கு புறம்பாக ஒருவர் கைது செய்யப்படுவதிலிருந்து இது பாதுகாக்கிறது.
ஆ) கட்டளையுறுத்தும் நீதிப்பேராணை (Mandamus)
• மனுதாரர் சட்ட உதவியுடன் தனது மனுதொடர்பான பணியினைச் சம்மந்தப்பட்ட துறையிலிருந்து நிறைவேற்றிக் கொள்ள முடியும்
இ) தடையுறுத்தும் நீதிப்பேராணை (Prohibition)
• ஒரு கீழ்நீதிமன்றம் தனது, சட்ட எல்லையைத் தாண்டி செயல்படுவதைத் தடுக்கிறது.
ஈ) ஆவணக் கேட்பு பேராணை (Certiorari)
• உயர்நீதிமன்றம், ஆவணங்களை நியாயமான பரிசீலனைக்கு தனக்கோ அல்லது உரிய அதிகாரிக்கோ அனுப்பச் செய்ய கீழ்நீதிமன்றங்களுக்கு இடும் ஆணை ஆகும்.
உ) தகுதிமுறை வினவும் நீதிப்பேராணை (Quo-Warranto)
• இப்பேராணை சட்டத்திற்குப் புறம்பாக, தகாத முறையில் அரசு அலுவலகத்தைக் கைப்பற்றுவதை தடை செய்கிறது.

அடிப்படை உரிமைகளை நிறுத்தி வைத்தல்
• இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 352ன் கீழ் குடியரசுத்தலைவரால் அவசரநிலை அறிவிக்கப்படும் பொழுது, இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 19ன் கீழ் உத்திரவாதம் அளிக்கப்பட்ட சுதந்திரம் தாமாகவே நிறுத்தப்படுகிறது.
• மற்ற அடிப்படை உரிமைகளையும் குடியரசுத்தலைவர் சில குறிப்பிட்ட ஆணைகளைப் பிறப்பிப்பதின் மூலம் தடை செய்யலாம்.
• குடியரசுத்தலைவரின் இந்த ஆணைகள் நாடாளுமன்றத்தால் கட்டாயம் அங்கீகரிக்கப்பட வேண்டும்.

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.